தமிழகத்தின் மிக முக்கியமான வர்த்தக அமைப்பான இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் 77-வது ஆண்டு கூட்டம் அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்த அமைப்பு, இந்தியாவின் பழமையான தொழில் முறை சங்கங்களில் ஒன்றாகும்.
இந்த நிகழ்வில் ‘ கைடன்ஸ் தமிழ்நாடு’ அமைப்பின் மேலாண்மை இயக்குநர் மற்றும் சி.இ.ஓ வி.விஷ்ணு, ‘ட்ரீம் தமிழ்நாடு’ அமைப்பின் நிறுவனர் மற்றும் கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ சுரேஷ் சம்பந்தம், இந்துஸ்தான் சேம்பர் ஆஃப் காமர்ஸின் தலைவர் வ.நாகப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய சுரேஷ் சம்பந்தம், “தமிழ்நாடு தொழில் துறையில் மற்ற மாநிலங்களைவிட முன்னேறி இருக்கிறது. நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் இன்றும் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.
எல்லா வளமும் எல்லா வகையான தயாரிப்புகளும் தமிழ்நாட்டில் உள்ளன. ஆனால், அதை சந்தைப்படுத்துவதிலும், பிராண்டு ஆக்குவதிலும் நாம் தவறவிடுகிறோம்.
உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனங்களான ஜாக்கி மற்றும் ஹான்ஸ் ஒரு ஆண்டு ரூ.50,000 கோடிகளை ஆண்டு வருமானமாக ஈட்ட முடிகிறது. ஆனால், திருப்பூர், கோயமுத்தூர் பகுதியில் உள்ளாடை தயாரிக்கும் நிறுவனங்களால் ஏன் அவ்வளவு வருமானம் ஈட்ட முடியவில்லை. இதற்கு காரணம் பிராண்டை சரியான முறையில் உருவாக்காததுதான்.
ஒரு உள்ளாடையை வெளிநாட்டு நிறுவனத்தால் 300 ரூபாய்க்கு விற்க முடிகிறது. ஆனால், உள்ளூர் உள்ளாடை நிறுவனங்களால் 60 ரூபாயைத் தாண்டி விற்க முடியவில்லை எனில், நாம் அதிகம் நம் தயாரிப்புகளை பிராண்ட் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
பனையில் செய்யப்பட்ட மிட்டாய்களில் அத்தனை நன்மை இருக்கிறது. ஆனால், அதன் விலை ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் குறைவு. ஆனால், மற்ற மிட்டாய்கள் 100 கிராம் 300 ரூபாய்கு விற்றப்படுகிறது.
நுங்கு, கீழாநெல்லி, மிளகாய் என பல நம் மண்ணின் பொருள்கள் மூலம் பல தயாரிப்புகள் உருவாகப்படுகிறது. ஆனால், அவற்றின் விலை மிகவும் குறைவு. இதையெல்லாம் நாம் பிராண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் பெருகும்.
நமது இலக்கு பிராண்டுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது. தற்போது இருக்கும் 150 பிராண்டுகள் 500- ஆக உயர்த்தப்பட வேண்டும். அதன் மூலம் 50 லட்சம் வேலை வாய்ப்பு உருவாகும். தமிழ்நாட்டின் உற்பத்தி மதிப்பு 310 பில்லியன் டாலரிலிருந்து ஒரு டிரில்லியன் டாலர் வரை உயரும்” என்றார்.
இவரைத் தொடர்ந்து பேசிய வி.விஷ்ணு, “உலகப்போர் நேரங்களில்கூட சந்திக்காத பேரிழப்புகளை கொரோனா காலங்களில் நாம் சந்தித்தோம். இது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனுக்கும் நெருக்கடியை கொடுத்தது. அதிலிருந்து தற்போது உலகம் மீட்டமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில்கூட தமிழ்நாட்டின் பொருளாதாரம் சரிவை சந்திக்கவில்லை. சின்ன சின்ன மின்னணுச் சாதனங்கள் முதல் சந்திராயனுக்குத் தேவையான பாகங்களை வரை தமிழ்நாட்டில் இருந்து தயாரிக்கப்படுகிறது.
மின்னணு சாதனங்கள் உற்பத்தியிலும் ஏற்றுமதியிலும் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. அதே போல, உலகளவில் தயாரிக்கப்படும் பொருள்களின் நுகர்வோராக தமிழ்நாடு மாறி இருக்கிறது. உலக அளவில் தமிழ்நாட்டின் தயாரிப்புகள் தரம் உயர்ந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.
2023-2024-ஆம் ஆண்டுக்கு இந்த அமைப்பின் தலைவராக தொழிலதிபர் விஜய் பி. சோர்டியா நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்தப் பதவியை ஓராண்டு காலம் வகிப்பார்!