ஸ்ரீதேவி மறைவுக்கு என்ன காரணம்? – போனி கபூர் விளக்கம்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் 80களில் நம்பர் 1 நடிகையாக விளங்கியவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. 2018ம் ஆண்டு துபாய் ஹோட்டலில் பாத்ரூம் குளியலறையில் உள்ள பாத்-டப்பில் மூழ்கி இறந்துவிட்டார் என்று செய்திகள் வெளிவந்தன. அவர் தானாக விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்ற ரீதியில் அப்போதே சர்ச்சைகள் எழுந்தது.

ஸ்ரீதேவி மறைவு குறித்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு அது பற்றி மனம் திறந்து பேசி பேட்டியளித்திருக்கிறார் அவரது கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூர்.

“ஸ்ரீதேவியின் மறைவு இயற்கை ஆனதல்ல, அது விபத்தால் ஏற்பட்ட ஒரு மரணம். இது பற்றி காவல் துறை விசாரணையின் போது நான் 24 அல்லது 48 மணி நேரம் வரை பேசியதால் அது பற்றி மீண்டும் பேசக் கூடாது என்று முடிவு செய்திருந்தேன். இந்திய மீடியாவில் கண்டபடி செய்தி வருவதன் அழுத்தம் காரணமாகவே என்னிடம் அப்படி ஒரு விசாரணையை மேற்கொண்டதாக அந்த அதிகாரிகள் அப்போது என்னிடம் தெரிவித்தனர். ஸ்ரீதேவி மரணத்தில் எந்த ஒரு தவறான செய்கையும் இல்லை என்று கண்டுபிடித்தனர். இன்னும் சொல்லப் போனால் என்னிடம்'லை டிடெக்டர்' சோதனை கூட நடத்தினார்கள். எல்லா சோதனைகள், விசாரணை முடிவில் கடைசியாக ஸ்ரீதேவியின் மரணம் விபத்துதான் என்று உறுதி செய்தார்கள்.

அவர் அடிக்கடி சாப்பிடாமல் இருப்பார். என்னைத் திருமணம் செய்து கொண்டபின் பல நிகழ்வுகளில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் இருக்கிறது என்பதை டாக்டர்கள் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளனர். தான் அழகாக இருக்க வேண்டும் என்பதில் அவர் மிகவும் கவனமாக இருந்தார். சரியான தோற்றத்தில் இருந்தால்தான் சினிமாவில் அழகாக இருக்க முடியும் என்பதில் கவனம் செலுத்தினார்.

தெலுங்கு நடிகரான நாகார்ஜுனா, ஸ்ரீதேவியுடன் நடித்த போது நடந்த ஒரு விஷயத்தை என்னிடம் துக்கம் விசாரிக்க வந்த போது தெரிவித்தார். ஒரு படத்தில் நடித்த போது அவர் மிகவும் டயட்டில் இருந்துள்ளார். அதனால் மயக்கமடைந்து பாத்ரூமில் விழுந்து அவருடைய பல் கூட உடைந்து போனது என்று சொன்னார்,” எனத் தெரிவித்துள்ளார் போனி கபூர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.