Motivation Story: வறுமையிலிருந்து புகழ் வானுக்குப் பறந்த இசைப் பறவை டாலி பார்ட்டன் – நிஜக்கதை!

`இந்த உலகில் மகத்தான மாற்றம் எதுவுமே பேரார்வம் இல்லாமல் சாத்தியமானதில்லை.’ – ஜெர்மானிய தத்துவவியலாளர் ஜார்ஜ் வில்ஹெம் ஃபிரைடுரிச் ஹீகெல் (Georg Wilhelm Friedrich Hegel).

அமெரிக்காவின் டென்னஸி, நாஷ்வில்லியில் இருக்கும் வான்டர்பில்ட் யூனிவர்சிட்டி மெடிக்கல் சென்டர் (Vanderbilt University Medical Center). அன்றைக்கு அந்த மருத்துவ மையத்துக்கு ஒரு செக் வந்திருந்தது. அனுப்பியிருந்தவர் பிரபல பாடகியும், பாடலாசிரியருமான டாலி பார்ட்டன் (Dolly Parton).

பலமுறை அவர் இதுபோல நன்கொடை கொடுத்திருக்கிறார். ஆனால், இந்த முறை தொகை அதிகம். ஒரு மில்லியன் டாலர். அது கோவிட்-19 தீயாகப் பரவ ஆரம்பித்திருந்த நேரம். பணத்தோடு ஒரு குறிப்பையும் அனுப்பியிருந்தார் டாலி. `இந்த நன்கொடை கோவிட்-ஐ குணப்படுத்துவதற்குப் பயன்பட வேண்டும்.’ வான்டர்பில்ட் மையத்தால் கோவிட்-ஐ முற்றிலுமாக குணப்படுத்த இயலவில்லை. ஆனால், Moderna Vaccine என்கிற தடுப்பு மருந்தை மேம்படுத்த உதவி, பல லட்சக்கணக்கான மக்களை கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவியது. அது இருக்கட்டும். ஒரு மில்லியன் டாலரை அநாயாசமாக அள்ளிக்கொடுத்த டாலி பார்ட்டன், இன்றைக்குப் பெரும் பணக்காரர். ஒருகாலத்தில் அரை வயிற்றுக் கஞ்சிக்கே அல்லாடிய குடும்பத்தில் பிறந்தவர். சரி, எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தார் டாலி?

டாலி பார்ட்டன்

யூடியூபில் டாலி பார்ட்டனின் பாடல்கள் பல காணக் கிடைக்கின்றன. தோளில் ஒரு கிடாரை மாட்டிக்கொண்டு, அதை இசைத்தபடி பாடுகிறார். லேசாக நம் எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவின் குரல் சாயல். அழுத்தமான ஆங்கில உச்சரிப்பு. மயங்கவைக்கும் குரல். சட்டென்று இசைக்குள் இழுத்துவிடும் லாகவம். இதுதான் டாலியின் பலம். அமெரிக்காவில் மிகப் பிரபலமான, இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடப்படும் `கன்ட்ரி மியூசிக் சிங்கர்’ (Country Music Singer) டாலி. அது என்ன கன்ட்ரி மியூசிக்? அமெரிக்காவின் தெற்குப் பகுதியிலும், தென்மேற்குப் பகுதியிலும் பிரபலமாக இருக்கும் ஓர் இசை வடிவம். உழைக்கும் தொழிலாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும் கொண்டாடும் இசை. அதில் டாலி பார்ட்டன், அசைக்க முடியாத, அழுத்தமான பிம்பம். லெஜன்ட்.

டென்னஸியிலிருக்கும், லிட்டில் பீஜியன் ஆற்றங்கரை. அங்கிருக்கும் ஒரு மர வீடு. அதில், 1946-ம் ஆண்டு பிறந்தார் டாலி ரெபெக்கா பார்ட்டன் (Dolly Rebecca Parton). தப்பு… தப்பு… அதை வீடு என்று சொல்லக் கூடாது. ஒரேயோர் அறையாக அமைந்திருக்கும் மர கேபின். டாலியின் அம்மா, அப்பாவுக்கு மொத்தம் 12 குழந்தைகள். அவர்களில் நான்காவதாகப் பிறந்திருந்தார் டாலி. அப்பா விவசாயி. ஆனால், அது அவர்களின் சொந்த நிலம் அல்ல. அமெரிக்காவில் அவரைப் போன்ற விவசாயிகளை `Sharecropper’ என்று சொல்வார்கள். நிலத்தின் உரிமையாளரின் அனுமதியோடு நிலத்தை உழுது, பயிரிட்டுக்கொள்ளலாம். ஆனால், விளைச்சலில் ஒரு பகுதியை உரிமையாளருக்குக் கொடுத்துவிட வேண்டும். பெயருக்குத்தான் இப்படி ஒரு ஒப்பந்தமே தவிர, `உழுதவன் கணக்கு பார்த்தா உழக்குக்கூட மிஞ்சலை’ கதைதான். உரிமையாளருக்குக் கொடுத்தது போக, சொற்ப தானியமே மிஞ்சும்.

டாலி பார்ட்டன்

`உங்கள் பயணத்தை அனுபவியுங்கள்; ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய முயலுங்கள். நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதன் மீதான ஆர்வத்தையும் பிடிப்பையும் ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.’ – 5 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை வென்ற ரோமானிய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை நாடியா கோமானெசி (Nadia Comăneci)

டாலியின் குடும்பம், பெரும் குடும்பம். எவ்வளவு வந்தாலும், குழந்தைகளுக்கு கால் வயிறுகூட நிரம்பவில்லை. ஒரு நாள்கூட அத்தனை குழந்தைகளும் வயிறாரச் சாப்பிட்டதில்லை. அப்பா ஒரு புகையிலைத் தோட்டத்தைப் பராமரிக்கும் வேலையைக் கூடுதலாகச் செய்தார். கட்டட வேலைக்குப் போனார். டாலியின் அப்பாவிடமிருந்த ஒரே குறை… போதுமான அளவுக்குப் படிக்காதது. அம்மா ஏவி லீ-க்கு (Avie Lee) 35 வயதில் 12 குழந்தைகள். ஆனாலும் அத்தனை குழந்தைகளையும் பாரபட்சமில்லாமல் பார்த்துக்கொண்டார். குழந்தைகளை உற்சாகப்படுத்த அவ்வப்போது சில நாட்டுப்புறப் பாடல்களைப் பாடுவார்.

ஒருநாள் இரவு. அம்மாவிடம் வந்தார் டாலி. “அம்மா ரொம்பப் பசிக்குதும்மா. பசியில தூக்கமே வர மாட்டேங்குது.’’

டாலி பார்ட்டன்

பொங்கிவந்த கண்ணீரை அடக்கிக்கொண்டு அம்மா, “ஒரு நிமிஷம் டாலி…’’ என்றார். கிதாரை எடுத்தார். அதை வாசித்தபடி ஒரு பாடலைப் பாட ஆரம்பித்தார். சில வரிகள் பாடியதும் டாலியைப் பார்த்து, “ நீயும் சேர்ந்து பாடு டாலி…’’ என்றார். டாலியும் சேர்ந்து பாடினார். அம்மாவும் மகளும் அன்றைய இரவில் இசையில் தங்கள் பசியைக் கரைத்துக்கொண்டார்கள். அன்றைக்கு மட்டுமல்ல… பல நாள்கள் இப்படித்தான் கடந்தன. மெல்ல மெல்ல டாலிக்கு இசையின்மேல் ஆர்வம் வந்தது. பாட ஆரம்பித்தார். தானாகவே சில பாடல்களை உருவாக்கி, அதற்கு டியூன் அமைத்துப் பாடவும் முயற்சி செய்தார். இந்தச் சம்பவங்களையெல்லாம் டாலி பார்ட்டன், தன்னுடைய சுயசரிதையான `Coat of Many Colors’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார். பிற்பாடு அது தொலைக்காட்சி திரைப்படமாகவும் வெளிவந்தது.

தன் பசியை மட்டுமல்ல… வீட்டின் ஒட்டுமொத்த வறுமையையும் துடைத்தெறியும் சக்தி, இசை என்கிற மந்திரக்கோலுக்கு உண்டு என்பதைப் புரிந்துகொண்டார் டாலி. எந்தச் சூழ்நிலையிலும் அந்த மந்திரக்கோலை மட்டும் நழுவ விட்டுவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். ஒருநாள் டாலியின் வீட்டுக்கு அவருடைய சித்தப்பா பில் ஓவன் வந்தார். அப்போது, தன்னை மறந்து டாலி பாடிக்கொண்டிருந்தார். `அட… இந்தக் குழந்தை இவ்வளவு அழகாகப் பாடுகிறாளே…’ என்று அவருக்குத் தோன்றியது. டாலி பாடி முடித்தார்.

டாலி பார்ட்டன்

“டாலி… உனக்கு மியூசிக்னா அவ்வளவு இஷ்டமா?’’

“ஆமா.’’

“அப்போ முறைப்படி இசையைக் கத்துக்கோயேன்.’’

“சரி.’’ அந்தக் கணத்தில் டாலிக்கு இசையே வாழ்க்கையானது. இன்றுவரை அது தொடர்ந்துகொண்டிருக்கிறது.

`பெரிதாக சிந்தியுங்கள்; தடை வந்தால் தகர்த்தெறியுங்கள்; உங்களுடைய யோசனையை முழு ஆர்வத்துடன் செயல்படுத்துங்கள்.’ – ஜப்பானின் பெரும் பணக்காரர், சாஃப்ட் பேங்க் குரூப் கார்ப்பரேஷனின் சி.இ.ஓ., மசாயோஷி சன் (Masayoshi Son).

தன் சித்தப்பா பில் குறித்து, `மை லைஃப் இன் லிரிக்ஸ்’ (My Life in Lyrics) நூலில் டாலி குறிப்பிட்டிருக்கிறார். `என்னுடைய திறமையை முதலில் கண்டுபிடித்தவர் அவர்தான். அற்புதமான, அன்பான உறவினர்’ என்று சொல்லியிருக்கிறார். அமெரிக்காவின் தெற்குப் பகுதியில் வாழும் பலரைப்போலவே அவருடைய இசைப் பயிற்சியும் சர்ச்சிலிருந்துதான் தொடங்கியது. அத்ற்கு முன்பாகவே உள்ளூர் வானொலி நிலையமொன்றில் ஒரு சின்னப் பாடலையும் பாடியிருந்தார் டாலி.

13 வயதில் டாலிக்கு ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. அவர், பெயர் ஜானி கேஷ். பிரபல கன்ட்ரி சிங்கர். அவருக்கு டாலி பாடுவதைக் கேட்டதுமே பிடித்துப்போனது. திரும்பத் திரும்பப் பாடச் சொல்லி ஊக்கம் கொடுத்தார்; உற்சாகமூட்டினார். `இசைதான் உன் கரியர். அதை மறந்துவிடாதே’ என்பதை அழுத்தம் திருத்தமாக அடிக்கடி சொன்னார். 1964-ல் ஹைஸ்கூல் படிப்பை முடித்தார் டாலி. நாஷ்வில்லிக்குத் திரும்பினார். அங்கே பாடல் எழுதும் வேலையை முறையாக ஆரம்பித்தார். டாலியின் இசைப் பயணம் பல திருப்பங்களையும் சுவாரஸ்யங்களையும் கொண்டது. எத்தனையோ இசை மேதைகளுடன் இணைந்து பயணித்திருக்கிறார்.

டாலி பார்ட்டன்

இடையில் வந்தது காதல். கார்ல் டீன் (Carl Dean) என்பவரைச் சந்தித்தார். பேச்சே இல்லை, இருவருடைய மனங்களும் `நான் உனக்குத்தான், நீ எனக்குத்தான்’ என்று சொல்லிக்கொண்டன. அப்போது டாலிக்கு 18 வயது. கார்லுக்கு 21 வயது. 1966-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். டாலியின் பாடல் ரெக்கார்டிங் கரியர் 1960-ல் ஆரம்பித்திருந்தாலும், 1971-ல்தான் சூடுபிடித்தது. அந்த ஆண்டு அவர் வெளியிட்ட ஆல்பம் `ஜோஷுவா’ மிகப்பெரிய ஹிட். 1974-க்குள் அவருடைய மிகப் புகழ்பெற்ற இசைத் தொகுப்புகளை டாலி வெளியிட்டிருந்தார். அவற்றில் தன் பால்யகால வாழ்க்கை, வறுமை அனைத்தையும் மறைக்காமல் குறிப்பிட்டிருந்தார். 1980-ல் அமெரிக்கா முழுக்க அறிந்த பாடகியாகிப்போனார். ரசிகர்கள் அவருடைய இசை நிகழ்ச்சிக்குத் திரண்டு வந்தார்கள். `9 to 5’ என்ற திரைப்படத்துக்கு தீம் மியூசிக் பாடலை இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. அதுவும் ஹிட். உலகம் முழுக்க இசை ரசிகர்களின் கண்ணில் முக்கியமான பிம்பமாகிப்போனார் டாலி பார்ட்டன். 1971-ல் அழுத்தமாக அடியெடுத்துவைத்த அவருடைய இசைப் பயணம் அதன் பிறகு எதற்காகவும் நிற்கவில்லை.

பாடகி மட்டுமல்ல… டாலி ஒரு பிசினஸ்வுமனும்கூட. `Dollywood’ என்கிற தீம் பார்க்கின் உரிமையாளர். ஃபோர்ப்ஸ் பத்திரிகை, `டாலியை மிகச்சிறந்த பிசினஸ் வுமன்’ என்று வர்ணித்திருக்கிறது. இன்றைக்கு அவருடைய சொத்து மதிப்பு பல மில்லியன் டாலருக்கும் மேல். இதுவரை 11 கிராமி விருதுகளை வென்றிருக்கிறார் டாலி. இது தவிர, எம்மி அவார்ட்ஸ், டோனி அவார்ட்ஸ்… எனப் பல விருதுகள்.

டாலி பார்ட்டன்

`பழசை மறக்காதே’ என்பார்கள் பெரியவர்கள். அதை ஆழமாகக் கடைப்பிடிப்பவர் டாலி. சிறு வயதில் ஒரு புத்தகம் வாங்க அவர் பட்ட பாட்டைத் தன் சுயசரிதையில் விவரித்திருப்பார். அதை நினைவு வைத்திருந்து குழந்தைகளுக்காகவே ஒரு நூலகத்தை ஆரம்பித்தார். 1988-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அந்த நூலகத்தின் பெயர், `Dolly Parton’s Imagination Library.’ அதில் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். மாதம் ஒன்றுக்கு உலகம் முழுக்கவுள்ள வசதியில்லாத குழந்தைகளுக்கு ஒரு மில்லியன் புத்தகங்களை வழங்குவது. அது இன்றைக்கு, டாலியின் 77-வது வயதிலும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

தன் பொதுசேவைகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கும் டாலி இப்படிக் குறிப்பிடுகிறார்… “நான் டென்னஸியில் வளர்ந்துகொண்டிருக்கும்போதே என் கனவுகள் ஒரு நாள் நனவாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.’’ நம்பிக்கை, இசையில் இருந்த வெறித்தனமான ஆர்வம் இவை இரண்டும்தான் டாலி பார்ட்டனை ஓர் இசைப் பறவையாக விண்ணில் பறக்கவைத்திருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.