அவதூறு மோசடி புகார்: 10 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர ஏ.ஆர்.ரஹ்மான் முடிவு

இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு அரசு அனுமதி வழங்காததால் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சங்கத்தின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில், 'இசை நிகழ்ச்சிக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கொடுக்கப்பட்ட 29.5 லட்சத்தை திருப்பி கேட்டபோது, அவர் பின் தேதியிட்ட காசோலையை வழங்கினார். ஆனால், அவர் வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்று அந்த காசோலை திரும்பி வந்து விட்டது. எனவே ரஹ்மான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசுக்கு மறுப்பு தெரிவித்து, ஏ.ஆர்.ரஹ்மான் தன் வழக்கறிஞர் மூலம் பதில் அளித்துள்ளார். அந்த பதில் நோட்டீசில் கூறப்பட்டிருப்பதாவது:

இசைத்துறையில் பல்வேறு விருதுகளை பெற்று மதிப்புமிக்க நபராக உள்ள ஏ.ஆர்.ரஹ்மான் மீது நீங்கள் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு அவரது நற்பெயரை கெடுக்கும் வகையிலும், உண்மைக்கு புறம்பாகவும் உள்ளது. இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்துக்கும், ரஹ்மானுக்கும் எந்தவிதத்திலும் தொடர்போ, ஒப்பந்தமோ இல்லாத நிலையில், மலிவான விளம்பரத்திற்காக இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி உள்ளீர்கள்.

நிகழ்ச்சிக்காக கொடுக்கப்பட்டதாக கூறப்படும் பணத்தை பெறவில்லை என்று ரஹ்மான் கூறியுள்ளார். 3வது நபரிடம் பணத்தை கொடுத்துவிட்டு, தேவையில்லாமல் ரஹ்மான் பெயரை தொடர்புபடுத்தி களங்கப்படுத்தி உள்ளீர்கள். எனவே, ரஹ்மானுக்கு அனுப்பிய நோட்டீசை 3 நாட்களுக்குள் திரும்ப பெறவேண்டும். வீண் பழி சுமத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். தவறும்பட்சத்தில், 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்படும். குற்றவியல் நடவடிக்கையும் தனியாக எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த பதில் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.