World Cup 2023 Important Players: இப்போது எங்கு தொடங்கினாலும் உலகக் கோப்பை தொடர் குறித்த பேச்சுகள்தான். ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர்தான் அடுத்த 45 நாள்களுக்கு மக்களின் அன்றாடங்களின் நிறைந்திருக்க போகிறது. அந்த வகையில், இந்த உலகக் கோப்பையில் எந்தெந்த வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அவர்கள் அணிக்கு கோப்பையை உறுதிசெய்வார் என்று பலரும் பல கணிப்புகளை அள்ளித் தெளித்து வருகின்றனர்.
அதேபோல், இந்த உலகக் கோப்பையில் பந்துவீச்சு, பேட்டிங் என அனைத்து பிரிவிலும் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ள மிக முக்கிய 10 வீரர்கள் குறித்து இதில் காணலாம். உலகக் கோப்பையில் பங்கேற்கும் 10 அணிகளில் இருந்து தலா 1 வீரர் என இந்த 10 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் நீங்கள் நினைக்கும் முக்கிய வீரர்கள் விடுபட்டுவிட்டால் வருத்தப்பட வேண்டாம். இது கடந்த சில போட்டிகளாக இவர்களின் செயல்பாடும், சில புள்ளிவிவரங்களின் அடிப்படையிலுமே கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்.
லோகன் வான் பீக் (நெதர்லாந்து)
உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணிக்காக சிறப்பாக விளையாடி தற்போது முக்கிய சுற்று வரை அழைத்து வந்தவர், லோகன் வான் பீக் தான். தகுதிச்சுற்றின் 8 பேட்டிகளில் 5.08 எகானிமியில் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார் இவர். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி போட்டியில் அவரின் பேட்டிங் எளிதாக மறக்க முடியாத ஒன்றாகும். நெதர்லாந்தில் இவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் ஒரு போட்டியிலாவது வெற்றி உறுதிதான்.
மகேஷ் தீக்ஷனா (இலங்கை)
தகுதிச்சுற்றின் மூலம் உலகக் கோப்பைக்கு நுழைந்த மற்றொரு அணி இலங்கை. இதில் பேட்டர்கள், ஆல்-ரவுண்டர்களை விட இந்த அணியின் தற்போதைய ஆஸ்தான ஸ்பின்னராக காணப்படும் மகேஷ் தீக்ஷனாதான் முக்கிய இவர் ஆவார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ள இவருக்கு இந்திய சூழலும் பழக்கப்பட்டதுதான். ஆஃப் ஸ்பின்னரான இவரிடம் இருக்கும் வேரியஷ்கள் பேட்டர்களை நெருக்கடிக்கு உள்ளாக்க வல்லவை. இவர் இந்தாண்டு 15 போட்டிகளில் விளையாடி 31 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது கவனித்தக்கது.
நஜ்முல் ஹோசனை ஷாண்டோ (வங்கதேசம்)
ஓப்பனரான நஜ்முலின் செயல்பாடு வங்கதேச அணிக்கு மிக முக்கிய ஒன்றாகும். இந்த வருடம் இவர் 14 இன்னிங்ஸில் 2 சதம் மற்றும் 5 அரைசதம் உள்பட 698 குவித்துள்ளார். அந்த வகையில் வங்கதேசத்திற்கு இவர் மிகப்பெரிய சொத்தமாக காணப்படுகிறார். பயிற்சி ஆட்டத்தில் இலங்கை அணியை வீழ்த்தி வங்கதேசம் தன்னம்பிக்கையுடன் காணப்படுகிறது.
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
சத்ரான், குர்பாஸ் அகமது உள்ளிட்டோர் தான் பலருக்கும் தோன்றும் என்றாலும் சுழற்பந்துவீச்சுதான் அந்த அணியின் முக்கிய ஆயுதம். அதில் ரஷித் கான் தான் கூர்மையான ஆயுதம் ஆவார். இவருக்கும் இந்திய மண்ணில் நல்ல அனுபவம் உள்ளது. இவர் கடந்த 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை வெறும் 4.67 என்ற எகானமியில் வீசியுள்ளார். இலங்கை அணியை வீழ்த்தி ஆப்கன் நல்ல ஃபார்முடன் இந்த தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. zeenews.india.com/tamil/sports/super-tactics-by-afghanistan-this-ex-indian-captain-appointed-as-mentor-for-them-in-icc-world-cup-2023-466238
ஹென்ரிச் கிளாசென் (தென்னாப்பிரிக்கா)
உலகக் கோப்பைக்கும் தென்னாப்பிரிக்காவும் ஒறு கொடூர லவ் ஸ்டோரியே இருப்பது அனைவருக்கும் தெரிந்தாலும், பழைய கதைகளை மறக்கடிக்கச் செய்ய சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவது ஒன்றே தீர்வாக இருக்கும். அதில், கிளாசென் முக்கிய பங்கை வகிக்க வாய்ப்புள்ளது. இவர் மிடில் ஓவரில் களமிறங்கி அதிரடியாக விளையாடக்கூடியவர். இவர் கடந்த 10 இன்னிங்ஸில் 408 ரன்களை எடுத்துள்ளார்.
ஷாகின் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்)
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான அப்ரிடி பாகிஸ்தான் அணியின் X Factor ஆவார். ஆனால், தற்போது நசீம் ஷா காயத்தால் விலகியுள்ள நிலையில், அவரின் பொறுப்பும் தற்போது ஷாகின் ஷா அப்ரிடியின் தலைமீது தான். எனவே, இவர் சிறப்பாக செயல்பட்டால் பாகிஸ்தானும் தொடரில் சோபிக்க வாய்ப்புள்ளது.
வில் யங் (நியூசிலாந்து)
நியூசிலாந்து அணியில் இவர் இந்தாண்டு சிறப்பாக விளையாடியிருக்கிறார். ஓப்பனிங்கில் அந் அணிக்கு நம்பிக்கை அளிக்கக் கூடியவராக உள்ளார். இவர் இந்தாண்டு 14 போட்டிகளில் 492 ரன்களை குவித்துள்ளார். இவர் சிறப்பான தொடக்கத்தை அளிக்க முடிந்தாலும், அதை பெரிய ஸ்கோராக மாற்ற திணறுகிறார் என்பது பலரின் விமர்சனமாக உள்ளது.
டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா)
ஆஸ்திரேலியா ஓப்பனரான வார்னருக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை தொடராகும். இந்தியாவில் இவருக்கு இருக்கும் அனுபவம் வேறு யாருக்கும் இருக்க வாய்ப்பே இல்லை. ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், மார்ஷ், கம்மின்ஸ், ஸ்டார்க் போன்ற கவனிக்கத்தக்க வீர்ரகள் பலர் இருந்தாலும் ஓப்பனிங்கில் அதுவும் பவர்பிளேவில் இவரின் வெறியாட்டம் மட்டும் ஆஸ்திரேலியா ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு வழிவகுக்கும்.
பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் பென் ஸ்டோக்ஸ். ஓய்வில் இருந்து மீண்டும் ஒருநாள் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ளார். இவருக்கும் இதுதான் கடைசி உலகக் கோப்பை. உயிரை கொடுத்து போராடும் வல்லமைக் கொண்ட வீரர்களில் இவர் தனித்துவமானவர். கடினமான போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். கடந்த உலகக் கோப்பையை போலவே இவரின் மேஜிக் தொடர்ந்து, இங்கிலாந்து கோப்பையை தக்க வாய்ப்புள்ளது.
விராட் கோலி (இந்தியா)
சுப்மான் கில் தான் பலரின் முதல் சாய்ஸாக இருப்பார். ஆனால், விராட் கோலியின் நிலையான ஆட்டம் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு பல வெற்றிகளை பெற்று தந்துள்ளது. கடந்த உலகக் கோப்பையில் ஒரு சதத்தை கூட விராட் கோலியால் பதிவு செய்ய முடியவில்லை. அந்த கணக்கை இதில் அவர் ஈடுசெய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. வேறு யாரையும் விடவும் உலகக் கோப்பை வெல்ல வேண்டிய கட்டாயம் விராட் கோலிக்கு தான் உள்ளது. அவர் நவ. 19ஆம் தேதி கோப்பையை கையில் ஏந்தி முத்தமிட, அவரின் பேட்டின் மூலம் சதங்கள் குவிய வேண்டும்.