உஜ்வாலா பயனாளிகளுக்கான சிலிண்டர் மானியம் ரூ.300 ஆக உயர்வு

புதுடெல்லி: பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர்களை பயன்படுத்தும் பயனாளிகளுக்கான சிலிண்டர் மானியத்தை மத்திய அரசு ரூ.300 ஆக உயர்த்தியுள்ளது.

கிராமப்புற மற்றும் ஏழை எளிய மக்கள் விறகு அடுப்புக்குப் பதிலாக சிலிண்டர்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு பிரதமர் உஜ்வாலா திட்டத்தைக் கொண்டு வந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 கோடியே 60 லட்சம் பேர் சிலிண்டர் பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 14.2 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர் வழக்கமான விலையில் இருந்து ரூ.200 மானியம் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் ரூ. 200 குறைத்தது. இதன் காரணமாக டெல்லியில் ரூ.1,103 ஆக இருந்த சிலிண்டரின் விலை 903 ஆக குறைந்தது. அதேநரத்தில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஒரு சிலிண்டர் விலை ரூ.703 ஆக விற்கப்பட்டு வந்தது. உஜ்வாலா திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில் கூடுதலாக 75 லட்சம் பேரை இந்த திட்டத்தின் கீழ் இணைக்க மத்திய அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. அடுத்த 3 நிதி ஆண்டுகளில் அதாவது 2025-26ம் ஆண்டுக்குள் 75 லட்சம் பேருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது முடிவடையும்போது இந்த திட்டத்தின் கீழ் இணைபவர்களின் எண்ணிக்கை 10.35 கோடியாக இருக்கும்.

இந்நிலையில், இன்று கூடிய மத்திய அமைச்சரவையில் உஜ்வாலா திட்ட சிலிண்டருக்கான மாநியத்தை ரூ.200ல் இருந்து ரூ.300 ஆக உயர்த்தி உள்ளது. இதனால், 14.2 கிலோ கிராம் எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.803 ஆக குறையும். இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.