தஞ்சாவூர்: “விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி மலரும்” என முன்னாள் அமைச்சர் காமராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுக கட்சியின் தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட, மாநகர செயலாளர் மற்றும் ஜெ.பேரவை மாநில இணை செயலாளர் ஆகியோரது அறிமுகக் கூட்டமும், முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திருவுருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக அமைப்பு கழக செயலாளரும், திருவாரூர் மாவட்டச் செயலாளருமான காமராஜ் தலைமை வகித்துப் பேசியது: “தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. காவிரி டெல்டாவுக்குப் போதிய தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்கள் கருகி வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கர்நாடகாவிடம் கேட்காமல், பெங்களூருவில் நடந்த இண்டியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்று விருந்து சாப்பிட்டு வருகிறார்.
மகளிருக்கு உரிமைத் தொகை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு இன்று பல பெண்கள் உரிமைத் தொகை கிடைக்காமல் அலைந்து வருகின்றனர். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அனைத்து பெண்களுக்கும் விடுபடாமல் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் பண்டிகைக்கு ரூ.2,500 வழங்கியதை இன்றும் மக்கள் பாராட்டுகின்றனர். எனவே, அதிமுக ஆட்சி விரைவில் தமிழகத்தில் மலரும். அதற்காக அதிமுக நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை கடுமையாக உழைக்கவேண்டும்” எனத் தெரிவித்தார். முடிவில் கும்பகோணம் ஒன்றிய செயலாளர் அறிவழகன் நன்றி கூறினார்.