சேலம் மாவட்டம், எடப்பாடி பயணியர் மாளிகையில், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க கூட்டணியிலிருந்து அ.தி.மு.க வெளியேறியது தொடர்பாக ஏற்கெனவே விளக்கமாக பதிலளித்துவிட்டேன். 2 கோடி தொண்டர்களின் உணர்வை மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்ததன் அடிப்படையில், ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அடுத்து எந்தெந்த கட்சிகள் அ.தி.மு.க கூட்டணிக்குள் சேரும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.
அ.தி.மு.க, பா.ஜ.க தனித்தனியாக கூட்டணி அமைத்தால் வாக்குகள் சிதருமா என்றால், அப்படி ஒன்றும் இல்லை. அ.தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோகமாக வெற்றி பெறும். இதற்கு முன்பு 10 தொகுதிகளில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பை இழந்தனர். உறுதியாக 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகத்தில் இரண்டரை ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் 520 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் 10 சதவிகிதம்கூட நிறைவேற்றவில்லை். ஆனால், 95 சதவிகித வாக்குறுதிகளை நிறைவேற்றியிருப்பதாக பச்சைப்பொய் சொல்லி வருகிறார். இரண்டரை ஆண்டுகளில் மின்சாரக் கட்டணம் 52 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. வீட்டு வரி 100 சதவிகிதமும், கடை வரி 120 சதவிகிதமும் உயர்ந்திருக்கின்றன. அத்தியாவசியப் பொருள்கள் விலை 40 சதவிகிதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில்தான் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கவிருக்கிறோம். இந்தத் தேர்தல் எங்கள் கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும்.
மக்களின் தேவைக்காகவும், தென்னை விவசாயிகளின் நலன் கருதியும் ஜெயராமன் டெல்லிக்குச் சென்று நிதியமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். தென்னை விவசாயிகளுக்கு உரிய வருவாய் இல்லாததால், அவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். காவிரி நதிநீர்ப் பிரச்னைக்காக தி.மு.க எம்.பி-க்கள் மத்திய நீர்வளத்துறை அமைச்சரைச் சந்தித்தது தொடர்பாக ஏன் கேள்வி வரவில்லை.
இந்தியா கூட்டணி என்பது ஒரு நாடகம். அதில் பல்வேறு முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்திருக்கின்றன. அது முழு வடிவம் பெறவில்லை. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி கம்யூனிஸ்ட் கட்சியுடன் உடன்பாடு இல்லை என்று கூறுகிறார். பல்வேறு முரண்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்துதான் இந்தியா கூட்டணியை அமைத்திருக்கின்றனர். டெல்டாவுக்கு எவ்வளவு தண்ணீர் தேவை என்பதைக் கணக்கிட்டு, அதன்படி தண்ணீர் திறப்பதில் செயல்பட்டிருக்க வேண்டும்.
ஆனால், முதலமைச்சர் அவசரப்பட்டு தண்ணீர் திறந்தார். தன்னை டெல்டாகாரன் என்று கூறிக்கொண்ட அவர், இப்போது காணவில்லை. டெல்டா விவசாயிகளின் நிலையை இப்போது அறிந்தார்களா… அவர்களை சென்று பார்த்தார்களா… டெல்டாவில் ஐந்தரை லட்சம் ஏக்கரில் செய்யப்பட்ட பயிர்களில் மூன்று லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகிவிட்டன.
டெல்டா விவசாயிகள்மீது அக்கறை இருந்திருந்தால், உண்மையிலேயே காவிரியில் நமக்கான பங்கைப் பெற்றிருக்க வேண்டும். ஸ்டாலினுக்கு ஆட்சி அதிகாரத்துக்கு வர வேண்டும் என்பதுதான் எண்ணம். கூட்டணியில் கெஜ்ரிவால்போல் நடந்து கொண்டிருக்க வேண்டும். கூட்டணி அமைக்கும்போது தமிழகத்தின் நிலைமையை எடுத்துச் சொல்லியிருந்தால், சாதகமான சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். அந்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டார். கர்நாடகாவில் அணைகள் நிரம்பியிருக்கின்றன. எனவே, நமக்கான தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். அவர்கள் இப்போதுகூட தண்ணீர் திறக்க மறுக்கின்றனர். டெல்டா விவசாயிகளின் கண்ணீரை தி.மு.க அரசு கண்டுகொள்ளவில்லை.
மத்தியில் ஆட்சிக்கு வர வேண்டும், தாங்கள் கொள்ளையடித்தப் பணத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கம். மக்கள் அவர்களைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்கான பதிலை தேர்தலில் காட்டுவார்கள். கிராமசபைக் கூட்டத்தில் விவசாயிகள் கேள்வி எழுப்பியதால், அவர்கள்மீது தி.மு.க-வினர் தாக்குதல் நடத்தியது கண்டனத்துக்குரியது. பா.ஜ.க-வின் தேசியத் தலைவர்கள் அமித் ஷா, நட்டா, மோடி என யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை. எங்களுடைய தொண்டர்களின் மனதைக் காயப்படுத்திவிட்டனர். தொண்டர்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில்தான் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
பா.ஜ.க எங்களிடம் சீட்டு ஒதுக்கீடு தொடர்பாக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, அதைப் பற்றி பேசவும் இல்லை. தமிழகத்திலுள்ள பா.ஜ.க தலைவரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அ.தி.மு.க வைத்ததாகப் பேசும் பேச்சும் தவறானது. எங்களுடைய கூட்டத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் நாங்கள் விலகியிருக்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் மிகப்பெரிய கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம். 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க தலைமையில் நல்ல கூட்டணி அமைத்து வெற்றி பெற்று, மக்களுக்குத் தேவையான திட்டங்களை அளிப்போம். முஸ்லிம் சிறைவாசிகள் விடுவிப்பு கோரிக்கை தொடர்பாக சட்ட வல்லுநர்களை கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.