“சட்டம் – ஒழுங்கு சீரழிவு… திமுக அரசின் தோல்வி” – நெல்லை இளம்பெண் படுகொலைக்கு சீமான் கண்டனம்

சென்னை: “தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தற்போதைய சட்டம் ஒழுங்கு சீரழிவுக்கான முழுபொறுப்பையும் ஏற்று, அதனைச் சீர்செய்வதற்கான முயற்சியை முன்னெடுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி அருகே உள்ள திருப்பணிகரிசல் குளம் கிராமத்தைச் சேர்ந்த சந்தியா, திருநெல்வேலி மாநகரில் உள்ள அழகு நிலைய பொருள் விற்பனைக் கடையில் பணியாற்றி வந்த நிலையில், ஒரு தலைகாதல் காரணமாக அதே பகுதியில் பணிபுரிந்து வந்த இளைஞரால் படுகொலை செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

தமிழகத்தில் அண்மைக்காலமாக இளம்பெண்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்படுவது அதிகரித்துவருவது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றாகச் சீரழிந்துள்ளது என்பதையே வெளிப்படுத்துகிறது. 18 வயது நிரம்பாத இளம் பிள்ளைகள் அதிக அளவில் கொலை செய்யப்படுவதும், கொலை செய்யும் அளவுக்குக் கொடூர குணமுடையவர்களாக ஆகிவிட்டதும் சமூகமே குற்றச்சமூகமாக மாறி நிற்பதையே காட்டுகிறது.

தமிழகத்தில் 60 ஆண்டுகாலம் தொடர்ச்சியாக ஆண்டுவரும் இரு திராவிடக் கட்சிகளின் நெறிதவறிய ஆட்சியால் மது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை சந்தையாக தமிழ் நிலத்தை மாற்றி நிறுத்தியுள்ளதன் விளைவே தற்போது இளைய தமிழ்ச்சமூகம் சீரழிந்துள்ளதற்கான முக்கியக் காரணமாகும். மதுபானத்தை அரசே விற்கும் திராவிடக் கட்சிகளின் கொள்கை நிலைப்பாடே தமிழகத்தில் நடக்கின்ற அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படையாகும். குறிப்பாக, திமுக ஆட்சிப்பொறுப்பேற்றது முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே முற்றாகச் சீரழிந்துள்ளது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்டக் கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது திமுக அரசின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது. காவல்துறையைத் தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் ஸ்டாலின், தற்போதைய சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்கான முழுபொறுப்பையும் ஏற்று, அதனைச் சீர்செய்வதற்கான முயற்சியை இனியாவது துரிதமாக முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

ஆகவே, சந்தியாவைக் கொடூரமாகக் கொலை செய்த குற்றவாளியை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்தி, உரிய தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், சந்தியாவின் குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக ஒரு கோடி ரூபாயும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.