சிக்கிம் வெள்ளம் | இதுவரை 3 உடல்கள் மீட்பு; 23 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரம்

காங்டாக்: சிக்கிம் மாநிலத்தில் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கிய 23 ராணுவ வீரர்களைத் தேடும் பணி தொடர்கிறது. இதுவரை அவர்களின் நிலை என்னவென்று தெரியாத சூழலே உள்ளது. தலைநகர் காங்டாக் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் உள்ளது லோனக் ஏரி. இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இந்த மேகவெடிப்பால் டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் 23 ராணுவ வீரர்கள் மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடரும் சூழலில் இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றை அடையாளம் காணும் பணியும் நடைபெறுகிறது.

இதற்கிடையில், டீஸ்டா ஆற்றில் மதியம் 1 மணி நிலவரப்படி நீர்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை அளவுக்குக் குறைவாகவே உள்ளது என்றும், இனி திடீர் வெள்ளத்தால் ஆபத்து இல்லை என்றும் மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் ஆகிய மாவட்டங்களில் வரும் 8-ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூடும்படி அரசு உத்தரவிட்டது.

முன்னதாக, சிக்கிம் முதல்வர் பிஎஸ் தமங் சிங்டம் பகுதிக்குச் சென்று திடீர் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார். மூத்த அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிங்டம் நகர பஞ்சாயத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். காலநிலை மாற்றத்தாலேயே இந்தியாவில் இதுபோன்ற திடீர் மேகவெடிப்புகள் நிகழ்வதாக அறிஞர்கள் கூறுகின்றனர்.

அவசர எண்கள் அறிவிப்பு: சிக்கிம் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உதவிக்காக மாநில அரசு அவசர தொடர்பு எண்களை அறிவித்துள்ளது. 03592-202461/201145 காங்டாக்-03592-284444 நாம்சி- 03595-263734 மங்கன்- 03592-234538 பாக்யாங்- 03592-291936 சோரங்- 8016747244 கியால்சிங்-03595-250888 என ஒவ்வொரு பகுதிக்கும் பிரத்யேக தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதவிர சுற்றுலாப் பயணிகளுக்கு என -7001911393 ( முதன்மை அலுவலர்) (துணை இயக்குநர்)- 8101426284 எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

குடிநீர் விநியோகம் பாதிப்பு: சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சுங்தங் அணை பாலம், மங்கன் பாலம் முழுவதுமாக திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இவைதவிர மின்ஷிதாங் பாலம், ஜெமா மற்றும் ரிட்சு பாலங்களும் சேதமடைந்தன. இதனால் பல பகுதிகளில் குடிநீர் விநியோகம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.