நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தாவுக்கு 7 நாள் போலீஸ் காவல்

புதுடெல்லி: நியூஸ்கிளிக் நிறுவனத்தின் ஆசிரியர் பிரபிர் புர்கயாஸ்தா மற்றும் அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை தலைவர் அமித் சக்கரவர்த்தி ஆகியோர் 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

சீன நிறுவனங்களிடம் இருந்து ரூ.38 கோடி நிதி பெற்று, இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை பரப்பியதாக, நியூஸ்கிளிக் இணையதளத்தின் அலுவலகத்துக்கு நேற்று (அக்.3) அமலாக்கத்துறை சீல் வைத்தது.

இந்நிறுவனத்தின் மூத்த பத்திரிகையாளர்கள் பாஷா சிங்,உர்மிலேஷ், ஆனின்டியோ சக்ரவர்த்தி, வீடியோகிராபர் அபிஷர் சர்மா, எழுத்தாளர் கீதா ஹரிகரன் உட்பட பலரது வீடுகளில் போலீஸார் நேற்று சோதனை நடத்தினர். பத்திரிகையாளர்கள் அனுராதா ராமன், சத்யம் திவாரி, ஆதித்தி நிகாம் மற்றும் சுமேதா பால் ஆகியோர் போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிறுவனத்துக்கு கட்டுரைகள் அனுப்பிய மும்பையில் வசிக்கும் சமூக ஆர்வலர் தீஸ்டா சீத்தால்வாட் வீட்டில் மும்பை போலீஸார் சோதனை நடத்தி விசாரித்தனர்.மூத்த பத்திரிக்கையாளர்கள் பரன்ஜாய் குஹா தகுர்தா, சுமோத் வர்மாஆகியோர் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

தொடர்ந்து நியூஸ்கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அதன் நிர்வாக அதிகாரி அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். யூஸ்கிளிக் நிறுவனத்தின் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (யுஏபிஏ), இந்திய தண்டனைச் சட்டம், 2 குழுக்களுக்கு இடையேவிரோதத்தை ஏற்படுத்தியது, குற்றசதி என பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சீனா தொடர்புடைய நிறுவனங்களிடம் இருந்து நியூஸ் கிளிக் நிறுவனம் ரூ.38 கோடி பெற்றுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் இருவரும் 7 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என 40-க்கும் மேற்பட்டோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.