போனில் மூழ்கிய தாய்; நீரில் மூழ்கிய மகன்… தவறு யாருடையது? கோர்ட் விசாரணை..!

டெக்சாஸின் எல் பாசோவில் உள்ள கெம்ப் கோஹன் வாட்டர் பூங்காவுக்கு கடந்த மே மாதம் ஜெசிகா வீவர் தன் 3 வயது குழந்தை ஆண்டனி லியோ மலாவுடன் சென்றுள்ளார். அங்கிருந்த குளத்தில் குழந்தையை விட்டுவிட்டு அருகில் இருக்கும் பலகையில் அமர்ந்து ஜெசிகா போன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் குழந்தை ஆண்டனி ஆழம் அதிகமான பகுதிக்குச் சென்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஆண்டனி

அப்போது குழந்தையை மீட்ட காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அந்தப் பூங்காவில் இருந்தவர்கள் கூறிய சாட்சியங்களின் படி, தாய் தன் மகனை கவனிக்காமல் நீண்ட நேரம் போனில் இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் காவல்துறையினர் கடந்த செப்டம்பர் மாதம் ஜெசிகாவை கைது செய்து கவுண்டி சிறையில் அடைத்தனர், தொடர்ந்து அவர் 10,000 டாலர் கொடுத்து ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், மேலும் பலர் தற்போது ஜெசிகாவுக்கு எதிராக சாட்சி கூறியுள்ளனர். ‘ சரியாக நடக்கக்கூட தெரியாத குழந்தையை ஜெசிகா தண்ணீரில் இறக்கி விட்டுவிட்டு அவர் மேலே நின்றதை, தான் பார்த்ததாக ஒருவர் கூறியுள்ளார். மற்றொருவர், ஜெசிகா 10 நிமிடங்கள் வரை போனில் தன் நேரத்தைச் செலவிட்டதாகவும் குழந்தை நீரில் மூழ்கும் நேரத்தில் அவர் பலகையில் படுத்திருந்ததாகவும் மற்றொருவர் கூறியுள்ளார். மேலும் இறந்த குழந்தை உயிர்காக்கும் உடையோ அல்லது வேறு எந்தப் பாதுகாப்பு உபகரணங்களோ அணிந்திருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

குழந்தையுடன் ஜெசிகா

ஆனால் இவை அனைத்தையும் முற்றிலுமாக மறுத்துள்ள ஜெசிகா தரப்பு, தான் நியாயமற்ற முறையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகவும், தன் மகனின் இறப்புக்கு பூங்கா நிர்வாகம் மற்றும் அங்கு அலட்சியமாக செயல்பட்ட உயிர்காப்பாளர்களே காரணம் என கூறி அவர்கள் மீது 1 மில்லியன் டாலர் நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் பதிவு செய்துள்ளார். ஜெசிகா வழக்கு மீதான விசாரணை நடைபெற்று வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.