புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த 5 மாதங்களாக வன்முறை நீடித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு 4 கேள்விகளை எழுப்பி உள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டபுள் இன்ஜின் அரசு என கூறப்படும் அரசின் பிரித்தாளும் அரசியல் காரணமாக 5 மாதங்களுக்கு முன் மே 3-ம் தேதி மாலை மணிப்பூரில் கலவரம் மூண்டது. அதன் பிறகு கர்நாடக தேர்தல் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பணிகளை முடித்துவிட்டு ஒரு மாதம் கழித்து மணிப்பூருக்குச் சென்றார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. ஆனாலும், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் நிகழவில்லை. மாறாக, மோசமான நிலை என்பதில் இருந்து மிக மோசமான நிலைக்கு மணிப்பூர் மாறியது. சமூக நல்லணிக்கம் முற்றாக உடைந்து நொறுங்கியது. ஒவ்வொரு நாளும் மிக மோசமான குற்றச்சம்பவங்கள் குறித்த தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஆயுத குழுக்களுக்கும் மாநில காவல்துறைக்குமான மோதல் என்பது வழக்கமானதாக மாறியது.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி முழுமையாக அமைதி காத்தார். அவர் முதன்முறையாக மணிப்பூர் வன்முறை குறித்து நாடாளுமன்றத்தில் ஆகஸ்ட் 10ம் தேதி பேசினார். 133 நிமிடங்கள் கொண்ட அவரது அன்றைய உரையில் மணிப்பூர் குறித்து அவர் ஆற்றிய உரையின் நேரம் வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே. மணிப்பூர் மாநில பாஜக எம்எல்ஏக்களில் பெரும்பாலானவர்கள் முதல்வர் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தும்போதும் அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார். இத்தகைய சூழலில் இது தொடர்பாக சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறோம். அவை:
1. பிரதமர் மோடி கடைசியாக மணிப்பூருக்கு எப்போது சென்றார்?
2. பிரதமர் நரேந்திர மோடி கடைசியாக மணிப்பூர் முதல்வரிடம் எப்போது பேசினார்?
3.மணிப்பூர் பாஜக எம்எல்ஏக்களிடம் பிரதமர் மோடி கடைசியாக எப்போது சந்தித்தார்?
4. மணிப்பூரைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களிடம் பிரதமர் மோடி கடைசியாக இது குறித்து எப்போது ஆலோசனை நடத்தினார்?
ஒரு மாநிலத்தையும் அதன் மக்களையும் ஒரு பிரதமர் முற்றாக கைவிட்டுவிட்டது இதுபோல இதற்கு முன் நடந்ததே இல்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக மிகப் பெரிய பலத்துடன் ஆட்சிக்கு வந்த 15 மாதங்களில் மணிப்பூர் மிகமோசமான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. பாஜகவின் மோசமான கொள்கைகளும் பிரதமர் மோடியின் முன்னுரிமைகளுமே இதற்குக் காரணம்” என்று ஜெயராம் ரமேஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.