‘தென் தணிகை’ என்று பக்தர்களால் போற்றப்படும் சிறப்பினை உடையது குன்றத்தூர் முருகன் கோயில்.
சென்னைக்கு அருகே தாம்பரத்திலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவிலும், பல்லாவரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ள இந்தத் திருக்கோயில் சேக்கிழார் பெருமான் வழிபாடு செய்த சிறப்பினை உடையது.
ஆணவ மலமாகிய சூரபத்மனை திருச்செந்தூரிலும் கண்ம மலமாகிய சிங்கமுகாசுரனை திருப்பரங்குன்றத்திலும் தாருகாசுரனை திருப்போரூரிலும் சம்ஹாரம் செய்தார் முருகன். திருப்போரூரில் சம்ஹாரம் செய்து திருத்தணி செல்லும் வழியில் குமரன் அமர்ந்த மலை குன்றத்தூர் மலை என்கிறார்கள். இங்கே ஒரு சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து சிவபெருமான் வழிபாடு செய்த தலமும் இதுதான். முருகன் வழிபட்ட ஈசன் ‘கந்தழீஸ்வரர்’ என்ற திருநாமத்தோடு குன்றத்தூரின் மலையடிவாரத்தில் தனிக்கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2021-07/2bc98cfe-6c84-4e45-9bc6-9c8df34d2668/lord_muruga.jpg)
இப்படிப்பட்ட சிறப்புகளை உடைய இந்தத் திருக்கோயிலில் கடந்த 54 ஆண்டுகளாக கந்த சஷ்டி சூரசம்ஹார வைபவம் நடைபெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக இங்கு 1969 ம் ஆண்டு சூரசம்ஹாரம் நடைபெற்றது. பிறகு பல்வேறு காரணங்களால் சூரசம்ஹாரம் தடைபட்டது. இது இங்கு வந்து வழிபட்டுவரும் பக்தர்களுக்கு ஒரு மனக்குறையாகவே இருந்துவந்தது.
தற்போது கோயிலில் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்தும் அறங்காவலர்கள் குழு கூடி இது குறித்து ஆலோசித்தனர். இதற்கான கூட்டம் அண்மையில் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தாமரைக் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இந்த ஆண்டு கந்த சஷ்டிப் பெருவிழாவை சிறப்பாக நடத்துவது என்றும் அந்த வைபவத்தில் மீண்டும் சூரசம்ஹாரம் நிகழ்த்துவது என்றும் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து ஆலயத்தின் நிர்வாக அதிகாரியிடம் பேசினோம்.
“இந்த ஆண்டு குன்றத்தூர் ஆலயத்தில் சூரசம்ஹார விழா நடத்துவது என்று அறங்காவலர் குழுவின் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 54 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் விழா என்பதால் ஏற்பாடுகள் சிறப்பாகச் செய்ய இருக்கிறோம். நவம்பர் மாதம் 13- ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கும். 18 ம் தேதி சனிக்கிழமை சூரசம்ஹார வைபவம் நடைபெறும்.
மலையடிவாரத்தில் இந்த சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. திருச்செந்தூரில் நடைபெறுவதுபோலவே இங்கு சூரசம்ஹாரம் நடைபெற வேண்டும் என்பது எங்கள் ஆசை. இதற்காக ஆலயத்தில் இருந்த பழைய சூரர் சிலைகள் புதுப்பிக்கப்பட இருக்கின்றன. அதற்குரிய வாகனங்களும் புதுப்பிக்கப்படுகின்றன. எனவே இந்த ஆண்டு சிறப்பாக இந்த வைபவம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/10/IMG_20221030_WA0004.jpg)
இது குறித்துக் கோயில் பக்தர் ஒருவரிடம் பேசியபோது, “முருகப்பெருமான் கோயில் என்றாலே சூர சம்ஹாரம்தான் சிறப்பு. இங்கே ஏனோ அந்த வைபவம் நடைபெறாமல் இருந்தது. மீண்டும் சூரசம்ஹாரம் நடைபெறப்போகிறது என்கிற செய்தி மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. கந்த சஷ்டி ஆறு நாள்களும் இங்கே நிறைய பக்தர்கள் வருவார்கள். அவர்கள் அனைவருக்குமே இது மிகவும் சிலிர்க்க வைக்கக்கூடிய அனுபவமாக இருக்கும். நிச்சயம் இது பரவசம் தரக்கூடிய செய்திதான்” என்றார்.
54 ஆண்டுகளுக்குப் பிறகு குன்றத்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் நடைபெறும் செய்தி பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.