`ஜெயிலர்’ படத்தின் வெற்றிக்குப் பின் ஒரு டன் உற்சாகத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். அவரது 170-வது படமான த.செ.ஞானவேல் இயக்கும் படத்தின் (ரஜினி 170) படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில் ஆகியோர் இருக்கிறார்கள் என முன்பே சொல்லியிருந்தோம். இந்நிலையில் லைகாவும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுடன், படத்தின் பிற நட்சத்திரங்களையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…
கமலின் ‘விக்ரம்’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, ரஜினியின் ‘ஜெயிலர்’ படங்களுக்குப் பின், மல்டி ஸ்டார்கள் கூட்டணி போடும் படங்களுக்கு வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்திலும் ஏகப்பட்ட மல்டி ஸ்டார்கள் இருக்கின்றனர். அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
படப்பிடிப்புக்குச் செல்லும் முன் மீடியாக்களிடம் ‘இது ஒரு பிரமாண்ட படமாக இருக்கும்’ எனச் சொல்லியிருக்கிறார் ரஜினி. அமிதாப்பையும் அவரையும் ஒப்பிட்டு கேள்வி கேட்டதற்கு, “அமிதாப் சக்கரவர்த்தி. அவருடன் ஒப்பிடாதீர்கள்” எனத் தன்னடக்கமாகச் சொல்லியிருக்கிறார் ரஜினி. இவர்களின் காம்பினேஷன் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
படப்பிடிப்பு இன்று திருவனந்தபுரத்தில் தொடங்குவதால், ரஜினி உட்படப் படக்குழுவினர் அனைவரும் முன்னரே ஸ்பாட்டிற்குச் சென்றுவிட்டனர். அமிதாப் தொடர்ந்து மூன்று வாரங்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகத் தகவல். திருவனந்தபுரம், நாகர்கோவில் பகுதிகளில் இரண்டு வாரங்கள் படப்பிடிப்பு நடைபெறும் எனத் தெரிகிறது. மஞ்சு வாரியர், பகத், ரித்திகா, துஷாரா ஆகியோர் இந்த ஷெட்யூலில் இணைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். ரஜினியின் சிகை அலாங்கரங்களை இந்தியாவின் புகழ்பெற்ற ஹேர் ஸ்டைலிஸ்டான ஆலிம் ஹக்கிம் கவனிக்கிறார்.
‘ஜெயிலர்’ கேரளாவிலும் வரவேற்பைப் பெற்றுள்ளதால், அங்குள்ள ரஜினி ரசிகர்கள் அவரது வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். படப்பிடிப்பிற்கு இடையே கேரள ரசிகர்களையும் ரஜினி சந்திக்க உள்ளார் என்கிறார்கள். கேரளா படப்பிடிப்பைத் தொடர்ந்து சென்னையில் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்பு இருக்கிறது. வடபழனியில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் படத்துக்கான அரங்கம் அமைக்கும் வேலைகள் படுமும்முரமாக நடந்து வருகின்றன என்றும் தகவல். ரஜினியின் இந்தப் படமும், அஜித்தின் ‘விடாமுயற்சி’யின் படப்பிடிப்பும் இன்று ஒரே நாளில் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.