புதுடில்லி: ஆமதாபாத் – மும்பை இடையிலான, ‘புல்லட்’ ரயில் திட்டத்துக்கான வழித்தடம் அமைக்கும் பணியில், முதல் மலையை குடையும் பணி, 10 மாதங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளதாக, தேசிய அதிவிரைவு ரயில் கழகம் தெரிவித்துள்ளது.
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் இருந்து, மஹாராஷ்டிராவின் மும்பை வரையிலான, புல்லட் ரயில் திட்டத்துக்காக, என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும், தேசிய அதிவிரைவு ரயில் கழகம் 2016ல் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்துக்கான நிதி, கட்டுமானம், பராமரிப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை இந்த கழகம் மேற்கொண்டு வருகிறது.
ஆமதாபாத் – மும்பை இடையிலான புல்லட் ரயில் தடத்தில் ஏழு மலைகள் உள்ளன. இந்த மலைகளை குடைந்து வழித்தடம் அமைக்கும் பணியை தேசிய அதிவிரைவு ரயில் கழகம் செய்து வருகிறது.
இந்த வழித்தடத்திலான முதல் மலை, குஜராத்தின் வல்சத் மாவட்டம், அம்பர்காவ்ன் தாலுகாவில் உள்ள சரோலி கிராமத்தில் இருந்து, 1 கி.மீ., துாரத்தில் அமைந்துள்ளது. இந்த மலையை குடையும் பணி, 10 மாதங்களுக்கு முன் துவங்கியது.
என்.ஏ.டி.எம்., எனப்படும் புதிய ஆஸ்திரிய சுரங்க வழிமுறையை பின்பற்றி, இந்த மலையை குடையும் பணி நடந்தது. இந்த மலை, 1,148 அடி நீளம் உடையது. சுரங்கத்தின் விட்டம், 12.6 மீட்டரும், உயரம் 10.25 மீட்டரும் குடையப்பட்டுள்ளது.
இரண்டு ரயில்கள் ஒரே நேரத்தில் சென்று வரும் அளவுக்கு மலை குடையப்பட்டுள்ளது. இந்த பணி 10 மாதங்களில் செய்து முடிக்கப்பட்டதாக தேசிய அதிவிரைவு ரயில் கழகம் நேற்று தெரிவித்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement