உலகின் பெரும் கோடீஸ்வரரும் டெஸ்லா, எக்ஸ் சமூக வலைதளம் மற்றும் பேஸ் எக்ஸ் ஆகியவற்றின் நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க், தன் பிசினஸில் சிறந்து விளங்கக்கூடியவர் என்பது உலகம் அறிந்ததே. ஆனால் இவரின் தனிப்பட்ட வாழ்க்கை பல சிக்கல்களும் பிரச்னைகளும் நிறைந்ததாகவே இருந்துள்ளது. சமீபத்தில் வெளியான மஸ்கின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தின் மூலம் இது உலகுக்கு வெட்டவெளிச்சமாகியுள்ளது.
மஸ்க் தன் இளமைக்காலம் முதல் தற்போது வரை பல பெண்களுடன் உறவில் இருந்து பல குழந்தைகளைப் பெற்றுள்ளார். ஆனால் அதிகாரபூர்வமாக இவருக்கு மூன்று மனைவிகள், அவர்கள் மூலம் 11 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் தன் மூன்று மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.
எலான் மஸ்கின் வாழ்க்கை புத்தகத்தைத் தொடர்ந்து அவரது முதல் மனைவி ஜஸ்டின் மஸ்க் பல வருடங்களுக்கு முன்பு எழுதிய கட்டுரை ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் மஸ்க் தன்னிடம் அதிக கண்டிப்புக் காட்டியதாகவும், தான் மனைவியாக இல்லாமல் ஊழியராக இருந்திருந்தால் தன்னை அவர் பணி நீக்கம் செய்திருப்பதாகக் கூறியதாகவும் அந்தக் கட்டுரையில் ஜஸ்டின் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கட்டுரை ஒரு புறம் சுற்றிக்கொண்டிருக்க, தற்போது புதிதாக வேறு சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளார் மஸ்க்.
அதாவது, எலான் மஸ்கின் முன்னாள் காதலியும் கனேடிய பாடகியுமான க்ரைம்ஸ், மஸ்க் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்தத் தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், தன் மனுவில் க்ரைம்ஸ், ‘எலான் மஸ்க்குக்கும் எனக்கும் கடந்த ஆண்டு பிறந்த இளைய மகனை பார்க்க மஸ்க் எனக்கு அனுமதி வழங்கவில்லை. என் குழந்தையுடன் பெற்றோர் உறவை ஏற்படுத்த நான் விரும்புகிறேன். என் குழந்தைகளின் சட்டபூர்வமான பெற்றோரை நீதிமன்றம் அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்’ என்று க்ரைம்ஸ் குறிப்பிட்டுள்ளார். கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் எக்ஸ் தளத்தில் க்ரைம்ஸ், தான் எலானுக்கு எதிராக ஒரு சட்ட நடவடிக்கையைத் தொடரவிருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். மஸ்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய வால்டர் ஐசக்சனின் ஒரு பதிவுக்கு பதில் அளித்திருந்த க்ரைம்ஸ், ’என் மகனை பார்க்க அனுமதிக்குமாறு மஸ்க்கிடம் சொல்லுங்கள், அல்லது என் வழக்கறிஞருக்கு பதில் அளிக்கச் சொல்லுங்கள்’ என்று தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து தான் தற்போது க்ரைம்ஸ், எலான் மஸ்க்கிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.