`தென்னிந்திய மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோயில் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது!’ என பிரதமர் மோடி சர்ச்சையை கிளப்பியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/F7h19LGbgAA3h3r.jpeg)
தெலங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், தெலங்கானா மாநிலத்துக்கு நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அந்த மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த வகையில், நேற்று முந்தினம் தெலங்கானா நிஜாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுப் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை மட்டுமல்லாமல் கூட்டணிக்கட்சிகளையும் வம்படியாக விமர்சித்துப் பேசினார்.
அதாவது, “தென்மாநிலங்களில் இந்து கோயில்களை மாநில அரசாங்கம் வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. கோயில் சொத்துக்களையும், கோயில்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி வருகிறது! கோவில்களை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அநீதி! இதுபோல, சிறுபான்மையினருக்கு சொந்தமான வழிபாட்டுத் தலங்களை தங்களுடைய கட்டுப்பாட்டில் இந்த மாநில அரசுகள் கொண்டு வருமா?” எனக் கேள்வி எழுப்பியர் “நிச்சயம் செய்ய மாட்டார்கள்!” என அவரே பதிலளித்தார்.
மேலும் தொடர்ந்து, “சிறுபான்மையினர் நடத்தும் வழிபாட்டு தலங்களை இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில்லை. ஆனால், இந்து கோயில்களை மட்டும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்கிறார்களே ஏன்? சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில், `எவ்வளவு மக்கள் தொகையோ அதற்கேற்ற உரிமை’ என காங்கிரஸ் பேசிவருகிறது. இப்படிப் பேசும் காங்கிரஸ், கோயில்களை மாநில அரசுகள் விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்துமா? குறிப்பாகத் தெற்கில் உள்ள தனது கூட்டணிக் கட்சிகளிடம் பேசி, கோயில்களை விடுவிக்குமாறு, இந்துக்களிடம் ஒப்படைக்குமாறு கூறுமா?” எனக் காரசாரமாகக் கேள்வி எழுப்பி சிண்டுமுடிந்துவிட்டிருக்கிறார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு தி.மு.க எம்.பி.யும், தமிழ்நாடு அரசு வஃபு வாரிய உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா பதிலடி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் முகநூல் பதிவில், “தென்னிந்திய மாநிலங்களில் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. பள்ளிவாசல்கள் சர்ச்கள் அரசின் கட்டுப்பாட்டில் இல்லை’’ என பிரதமர் மோடி வாய் திறந்துள்ளார்!! இவர் உண்மையிலேயே பிரதமர்தானா?’’ என்ற சந்தேகம் எனக்கு வருகின்றது!!
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/download__23_.jpeg)
கோயில்களிலும்கூட சாய்பாபா கோயில்களிலோ மேல்மருவத்தூர் அம்மா, ஜக்கி வாசுதேவ் , காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்டவர்கள் நடத்துகின்ற கோயில்களிலோ அரசு நிர்வாகம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. கோயில் குறித்து அவர் ஏதோ பேசிவிட்டு போகட்டும். அவராச்சு அவர் மதமாச்சு! அதில் உண்மை உள்ளதோ இல்லையோ அது குறித்து எனக்கு தேவையுமில்லை அவசியமும் இல்லை. காரணம் நான் அந்த மதத்தைச் சேர்ந்தவன் அல்ல. எனவே எனக்கு அதில் எதுவும் கருத்து சொல்ல உரிமையும் இல்லை. ஆனால் பள்ளிவாசல்கள் குறித்து அவர் சொல்லியிருப்பது பச்சை பொய்! கோயில்களுக்கு இந்து அறநிலையத்துறை போல பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்களுக்கு வக்ஃபு வாரியம் என்ற அரசு துறை உண்டு! இந்து அறநிலையத்துறை அமைச்சர் போல இதற்கும் ஒரு அமைச்சர் உண்டு! தற்போது இந்து அறநிலையத்துறைக்கு அண்ணன் சேகர்பாபு இருப்பது போல வக்ஃபு துறை அமைச்சராக அண்ணன் மஸ்தான் இருக்கிறார். இதுபோக இதற்கென செயலாளராக தனி ஐஏஎஸ் அதிகாரி துவங்கி வாரியத்திற்கு தலைவர் உறுப்பினர்கள் வரை உண்டு. இவர்கள்தான் தமிழகத்தின் அத்தனை பள்ளிவாசல் தர்ஹாக்களை நிர்வகிக்கின்றனர்.
ஆகவே மோடி அவர்களே, தமிழக பள்ளிவாசல் மற்றும் தர்ஹாக்கள் அத்தனையும் 100% அரசின் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்கிறது. அதை நிர்வகிக்கும் தலைமை பொறுப்பில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் இருந்த நிலையையும் கூட நாங்கள் கடந்து வந்துதான் இருக்கிறோம். ஆட்சி முடியும் இந்த சூழலில் கூட வெறுப்பை விதைப்பதை மட்டுமே முழு நேர வேலையாகக் கொள்ளாமல் போகப் போகின்ற நேரத்தில் ஏதேனும் பிரயோஜனமாக செய்து விட்டுப் போக முயலுங்கள்!” என பதிவிட்டிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/64919204abce3.jpg)
தி.மு.க-வின் கடந்த இரண்டு ஆண்டு ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான ரூ.4000 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டிருக்கின்றன. 1000-க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், `தேர்தல் வாக்குகளுக்காகவும் I.N.D.I.A கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காகவும்தான் இப்போது பிரதமர் மோடி இந்து சமய அறநிலையத்துறை விவகாரத்தை கையிலெடுத்திருக்கிறார்’ என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.