பீஜிங்,
சீனாவின் ஷான்சி மாகாணம் வூடாய் நகர் அருகே உள்ள ஜின்பிங் கிராமத்தில் மக்காச்சோளம் பதப்படுத்தும் ஆலை ஒன்று உள்ளது. அங்குள்ள உலர்கள தொட்டியை சுத்தப்படுத்தும் பணிக்கு வேலையாட்கள் அமர்த்தப்பட்டனர்.
மக்காச்சோளம் பதப்படுத்தும் தொட்டிக்குள் இறங்கியப்படி ஒருவர் சுத்திகரிப்பு பணியை தொடங்கினார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி தொட்டிக்குள் விழுந்து கிடந்தார். அதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளர்கள் அவரை மீட்க தொட்டிக்குள் குதித்தனர்.
அப்போது அங்கு பரவியிருந்த விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தொட்டியில் மயங்கி கிடந்த 7 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் விஷவாயு தாக்கியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு தொழிலாளர்கள் 7 பேரும் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.