நடிகை கார் மோதி இரண்டு பேர் பலி | Two killed in actresss car collision

ரோம்,இத்தாலியில் நடந்த கார் விபத்தில் ஸ்வதேஸ் ஹிந்தி பட நடிகை காயத்ரி ஜோஷியின் கார் மோதியதில் வயதான தம்பதி பலியாகினர். இந்த விபத்தில் காயத்ரியும், அவரின் கணவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

ஆடம்பர கார்

கடந்த 2004ல் வெளியான ஸ்வதேஸ் ஹிந்தி படத்தில் நடிகர் ஷாரூக் கான் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை காயத்ரி ஜோஷி, 46.

ஒரே படத்துடன் சினிமா துறையில் இருந்து விலகிய அவர், கடந்த 2005ல் தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஐரோப்பிய நாடான இத்தாலியில் காயத்ரி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இங்குள்ள சர்தினியா தீவில் ‘கார் டூர்’ எனப்படும் ஆடம்பர கார்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது.

சொகுசு வேன்

இதில், கணவர் விகாசுடன் காயத்ரி பங்கேற்றார். சாலையின் ஒருபுறத்தில், அவரின் ‘லம்போர்கினி’ கார் உட்பட ஏராளமான கார்கள் ஒன்றை ஒன்று முந்தி சென்றன.

அப்போது, ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த வயதான தம்பதி ஓட்டி வந்த ‘பெராரி’ கார், காயத்ரியின் காரை முந்திச் செல்ல முயன்றது.

அப்போது, இரண்டு கார்களும், அருகில் சென்ற ‘டேம்பர் வேன்’ எனப்படும், குடும்பத்தினருடன் பயணிக்கும் சொகுசு வேன் மீது எதிர்பாராதவிதமாக மோதின.

இதில், மூன்று வாகனங்களும் சாலையில் கவிழ்ந்தன.

இந்த விபத்தில், பெராரி காரில் பயணித்த மெலிசா கிரவுட்லி, 63 மற்றும் மார்கஸ் கிரவுட்லி, 67 ஆகியோர் உயிரிழந்தனர்.

விபத்தில் சிக்கிய காயத்ரி மற்றும் அவரது கணவர் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.