இம்பால், மணிப்பூரில் மீண்டும் வெடித்த கலவரத்தில், இரண்டு வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
மோதல்
இங்கு, மெய்டி – கூகி பிரிவினரிடையே இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் மோதல் வெடித்தது.
இதையடுத்து, கடந்த ஐந்து மாதங்களில் நடந்த வன்முறையில், 175க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் காணாமல் போன ஒரு மாணவரும், மாணவியும் கொல்லப்பட்டதை கண்டித்து இம்பால் மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதில், உதவி கமிஷனர் மற்றும் பா.ஜ., அலுவலகங்கள் சூறையாடப்பட்டன.
மாணவர்கள் கொலை வழக்கில், சமீபத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் கூகி இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அப்பிரிவினர், மணிப்பூரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது போராட்டத்தை முன்னெடுத்துஉள்ளனர்.
இந்நிலையில், மேற்கு இம்பால் மாவட்டத்தில் உள்ள நியூ கெய்தெல்மன்பி பகுதியில் நேற்று முன்தினம் இரவு புகுந்த மர்ம கும்பல், இரண்டு வீடுகளை தீ வைத்து எரித்தது.
பின், துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த கும்பல், அங்கிருந்து தப்பியது.
பற்றி எரிந்த தீயை போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அணைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் திரண்ட மெய்டி பிரிவுப் பெண்களை, பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர்.
பாரபட்சம்
பதற்றத்தைத் தணிக்க அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினர், பாரபட்சமாக செயல்படுவதால், அவர்களை ‘வாபஸ்’ பெற வேண்டும் என்றும், தங்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாகவும், மெய்டி பிரிவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்