வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
அந்தச் சிறு கிராமமே அல்லோல கல்லோலப் பட்டது! பின்ன… கிராமத்தில சினிமா ஷூட்டங் நடக்குதுன்னா கேட்கவா வேண்டும்? அதுவும் சென்னையிலிருந்து 350 கி.மீ தூரத்திலுள்ள அந்த ஊர் மக்களுக்கு சினிமா ஷூட்டிங் என்பது இப்பவும் ரொம்பப் புதுசுதான். நம்ம ஊர் சினிமாக்காரர்களெல்லாம் ஊட்டி, கொடைக்கானலை விட்டால் அதிகமாகப் பொள்ளாச்சிப் பக்கம்தானே செல்கிறார்கள்? அதிலயும் இப்பவெல்லாம் அயல்நாடுகளுக்கல்லவா பறந்து விடுகிறார்கள்!
இதுவரை டெல்டாவிலுள்ள கீழப்பெருமழையைத் தேடி எந்தச் சினிமாக்காரரும் வந்ததில்லை. இந்தத் தயாரிப்பாளர் பக்கத்து ஊரான இடும்பவனத்தில் பிறந்து, அப்படியிப்படி எதிர் நீச்சல் போட்டு சென்னையைத் தொட்டு, இன்று இந்த அளவுக்கு உயர்ந்து விட்டார். அவர் மனம் பூராவும் சொந்த மண் வாசமே மணம் பரப்பிக் கொண்டிருந்ததால் இடும்பையின் அழகிய தென்னந்தோப்புகளில் காதல் காட்சிகளைப் படமாக்கியவர், ஒரு பெரிய சண்டைக் காட்சிக்காகக் கீழப்பெருமழைக்கு அருகிலுள்ள அவ்வையார் திடலைத் தேர்ந்தெடுத்தார்.
இடும்பவனத்தில் பெரிய கோயிலும், தேரோடும் வீதிகளுமுண்டு. பச்சைப்பசேலென்ற தென்னந் தோப்புகள், பட்டுக் கோட்டை வரை பரந்து கிடக்கும் பாங்கான அந்தப் பூமி, பொள்ளாச்சியை விடவும் அழகானது! கற்பகநாதர் குளக் கோயிலும், குளமும், எந்தத் தமிழ்ப் படத்திற்கும் ஏற்றது! வளவனாறும் அதன் கரைகளில் படர்ந்து கிடக்கும் மரங்களும், கேரள இயற்கைக்கு எந்த விதத்திலும் குறைவானவையில்லை. இவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள நம் படத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் ஏன் இன்னும் வரவில்லை? என்பதே, இப்பகுதியை அறிந்தவர்களின் கேள்வி.
அந்தக் கிராமத்தின் அழகே தனி. வடக்கிலிருந்து வருபவர்களைப் பிடாரி குளமும், தெற்கிலிருந்து வருபவர்களைத் தாமரைக் குளமும் வரவேற்கும். ஊரின் நடுவே உயர்வான இடத்தில் சிவன் கோயில். எதிரே திருக்குளம். அந்தத் திருக்குளமே ஊரை நான்கு தெருக்களாகப் பிரிக்கும் அடையாளம். இதய நோய்களைத் தீர்த்து நல் இதயம் படைத்தவர்களாக ஆக்கி அருள் புரியும் ஆத்மநாத சுவாமி, அம்பாள் அகிலேண்டேசுவரியுடன் ஊரின் உச்சியில் அமர்ந்து காத்து வருகிறார். பின்னாலேயே தருமர் கோயில். சைடில் ஐயங்குளம்.
தண்ணீருக்குப் பஞ்சமே வராத பக்குவம்!மேற்கே பிடாரி குளத்தை ஒட்டிப் பிடாரி கோயிலில் பிடாரியும்,அதன் மேற்குக் கரையில் ஈச்ச மர உருவில் ஐயனாரும் காவல் தெய்வங்கள். ஆற்றங்கரையில் ஐயனார், ஊரை விட்டுத் தூரத்தில் அமர்ந்து விட்டதாலோ என்னவோ, ஊரை ஒட்டி ஒரு பிரான்ச். தெற்கில் அன்னமடக் கோயில் காப்புக்கு அரண் என்றால் கிழக்கில் அங்காளபரமேஸ்வரியின் அருள் பாதுகாப்பு. பரிவாரங்களுடன் கோயில் வாசம் செய்யும் அம்பாள் வசதிக்காக, எதிரே குளம்.பெரியாச்சித் தாயும்,தூண்டிக்காரன் சுவாமியும் இடதும்,வலதுமாக இருந்து பாதுகாக்க,உள்ளே அம்பாளோ…இருளப்ப சுவாமி,பத்ரகாளி,தாண்டவராய சுவாமி எனப் பெரும் குழாத்துடன்.
அங்கிருந்து கூப்பிடு தூரத்தில்தான் குயவர் தெரு.சுமார் பத்துப் பதினைந்து வீடுகள்தான் இருக்கும். தெருவுக்குள் நுழையுமுன்னரே மாதா கோயில். சிறிய கீற்றுக் கொட்டகைதான் என்றாலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் சிறப்பான திருவிழா நடத்துவார்கள். கிராமத்து இந்துக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்து விருந்தினர்களாகக் கலந்து கொள்வார்கள். இந்து,கிறிஸ்து என்ற எண்ணமெல்லாம் எப்பொழுதுமே அவர்கள் மனங்களில் ஏற்பட்டதில்லை. மண்பாண்டம் செய்வதே அவர்கள் பிரதான தொழில் என்றாலும், அனைவருமே விவசாயத்தில் சூரர்கள்.
மண்பாண்டங்களின் தேவையை மக்கள் குறைத்துக் கொண்டார்களேயொழிய முழுவதுமாக மறந்து விடவில்லை.அதிலும் ஒவ்வோர் ஆண்டும் வரும் தைப்பொங்கல் விழாவன்று மொத்த ஊர் மக்களும் அவர்களிடம் மண் பானைகள் வாங்கிப் பொங்கல் இடுவதைத்தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்;அதனைத்தான் புனிதமாகவும் கருதுகிறார்கள்.
அதற்காகவே அவர்களும் தங்கள் தொழிலுக்கு எவ்வளவோ இன்னல்கள் வந்த போதும்,பொறுத்துக் கொண்டு,தொழிலை விட்டு விடாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.செவத்தி வேளார்தான் அவர்களின் முக்கியப் புள்ளி.கடின உழைப்பாளி மட்டுமல்ல,கனிவான மனமும் கொண்டவர்.வசதியானவருங்கூட. அதிலும் தனது மூத்த மகன் அந்தோணிசாமி சிறிய வயதிலேயே எதிர்பாராத விதமாக இறந்து போனவுடன்,மேலும் சாந்தமும்,அமைதியும் அவர் மனதில் அப்படியே தங்கி விட்டன.’ஈ,எறும்புக்குக் கூடத் தீங்கிழைக்காத தனக்கு,இயேசு ஏன் இப்படியொரு சோகத்தைக் கொடுத்தார்?’ என்று அவர் புலம்பாத நாட்களே இல்லை.
மழைக்கு முன்பாகவே மண்ணெடுத்து, குழைத்து,உரிய பக்குவங்களைச் செய்தால்தான் பாண்டங்களைச் சரியாக உருவாக்க முடியும். எனவேதான் வரும் பொங்கலுக்கு, இப்பொழுதே வேலையை ஆரம்பித்து, முதல் சூளையிலேயே தேவையில் பாதி அளவுக்குப் பானைகளைத் தயார் செய்து விட்டார். சின்னதும் பெரிதுமான பானைகள், சட்டிகள், புடைச் சட்டிகள்,பானைகளின் மூடிகள் என்று நேற்றுத்தான் சூளையைப் பிரித்தார்கள்.
இன்று அதனை அடுக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. முன்பு தனித்தனியாகத் தயாரித்து சூளை வைத்தது போய் இப்பொழுது எல்லோருமாகச் சேர்ந்து வேலை செய்கிறார்கள். அப்படியும் முன்பைப்போல் பெரிய வருமானமெல்லாம் இல்லை. செவத்தி வேளார் வீட்டு வழியாகத்தான் அவ்வைத் திடலுக்குச் செல்ல வேண்டும். காலையிலிருந்தே கார்களும், டூ வீலர்களும் போய் வந்து கொண்டிருந்தன. அப்புறந்தான் அவருக்கும் விஷயம் தெரிய வந்தது.
நம்மூர் ஷூட்டிங்குகளில், நடிப்பவர்களும் தொழில் நுணுக்கர்களும் ஐம்பது பேர் என்றால், பார்வையாளர்கள் பல ஆயிரம் பேர்கள் வந்து விடுவார்கள். படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள் ஆகிய அனைத்திலுமே அன்றைக்கு அதிகமாக ஆப்செண்ட் ஆகி விடுகிறார்களாம். எல்லோரும் படப்பிடிப்பு நடைபெறும் இடங்களில் கூடி விடுகிறார்களாம். லேட்டஸ்ட்டாக இன்னொன்றையும் சொல்கிறார்கள். பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் அன்றைக்கு விற்பனை பிய்த்துக் கொண்டு போகிறதாம்.
இரண்டு, மூன்று நாட்களாகவே படப்பிடிப்புக் குழுவினரும், ஸ்டண்ட் நடிகர்களும் அவ்வைத் திடலில் கூடாரம் போட்டு விட்டார்கள். நாளைக்குத் தான் கதாநாயகனும்,வில்லனும் வருகிறார்களாம். உதவி இயக்குனர்கள் சிலர் காட்சிகளுக்கான ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்து கொண்டிருந்தார்கள். செயற்கையான கடைத் தெருவை அங்கு ஏற்பாடு செய்தார்கள். அதில் மண்பாண்டங்கள் கொண்ட கடையும் ஒன்று. சண்டைக் காட்சிகளில் கடைகளை அடித்து நொறுக்கும்போது மண்பாண்டங்கள் எளிதாகவே சுக்கு நூறாகித் தெறிக்கும்.
உதவி இயக்குனர் உதவியாளர்கள் மற்றும் உள்ளூர் ஆட்கள் சிலருடன்,செவத்தி வேளாரை அணுகினார்.’இந்தச் சூளையில் வைத்த அனைத்துப் பாண்டங்களுக்கும் ஒரு விலையைச் சொல்லுங்க. எல்லாத்தையும் நாங்களே வாங்கிக்கிடறோம்.’என்ற உதவி இயக்குனரை இடை மறித்த செவத்தி வேளார்,’பானை சட்டிகளை என்ன தம்பி பண்ணுவீங்க?’ என்று அப்பாவியாகக் கேட்க,’இது என்ன சார் கேள்வி? எல்லாத்தையும் கதாநாயகனும்,வில்லனும் சண்டை போடறப்போ ஒடைச்சிடுவாங்க!”என்னது! ஒடைச்சிடுவாங்களா… எங்க பானை, சட்டிகளை வீணாவே ஒடைச்சிடுவாங்களா? வேண்டாம் தம்பி… வேண்டவே வேண்டாம்! தயவு செஞ்சு போயிடுங்க!’என்று உணர்ச்சிப் பிழம்பானார்.
இதைச் சற்றும் எதிர்பாராத உதவி இயக்குனர் குழு,’எவ்வளவு நீங்க கேட்டாலும் தரத் தயாரா இருக்கோம். எவ்வளவு வேணும்னு மட்டும் சொல்லுங்க. அதைக் கஷ்டப்பட்டு நீங்க வித்தா எவ்வளவு தொகை கிடைக்குமோ, அதைப்போலப் பத்து மடங்கு கூடத் தர்றோம்.இல்லன்னு மட்டும் சொல்லிடாதீங்க!’ என்று ஏக்கமாகக் கேட்க,
‘என்னை நீங்க எல்லாருமே மன்னிக்கணும். நாங்க ஏழைங்கதான். காசுக்காக மண் பாண்டத் தொழிலை பண்றவங்கதான். ஆனா, பாத்துப் பாத்துச் செஞ்ச எங்க பானைகள் எங்க ஊர்க்காரங்களின் கோட்டு அடுப்பிலேறி, அவர்களின் மகிழ்ச்சியோடவே பொங்கலையும் பொங்கி, அவங்க பசிக்கு உணவாக உதவி செய்யணும். இங்க வந்தவங்களுக்குச் சமைக்கன்னு எங்க பானைகளைக் கேட்டிருந்தாக் கூட நான் சும்மாவே கொடுத்திருப்பேன். எங்க ஊருக்கு வந்த நீங்க எல்லாரும் எங்களுக்கும் விருந்தாளிங்கதான். ஆனா சும்மாவே ஒடைக்கறதுக்காகக் கொடுக்க என் மனம் இடந்தரலை! தயவு செஞ்சு போயிடுங்க!’அவர் குரல் தீர்மானமாக ஒலித்ததைக் கேட்ட அவர்கள்,மெல்ல வெளியேறினார்கள்!
-என்றும் மாறா அன்புடன்,
-ரெ.ஆத்மநாதன்,
கூடுவாஞ்சேரி
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.