107 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது வெறுப்புணர்வு பேச்சு வழக்கு – ஆய்வில் தகவல்

புதுடெல்லி,

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பும், தேசிய தேர்தல் கண்காணிப்பகமும் இணைந்து, தேர்தலில் வெற்றி பெற்று தற்போது எம்.பி., எம்.எல்.ஏ.க்களாக இருப்பவர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியுற்ற வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாணபத்திரங்களை ஆய்வு செய்தன.

அதில், 33 எம்.பி.க்கள் தங்கள் மீது, வெறுப்புணர்வை தூண்டும் பேச்சுக்கான வழக்குகள் இருப்பதை தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அவர்களில் அதிகபட்சமாக 7 பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். அடுத்தபடியாக 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.

அதேபோல, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடப்பு எம்.எல்.ஏ.க்கள் 74 பேர் மீது வெறுப்பு பேச்சு வழக்குகள் உள்ளன. அதில் அதிகபட்சமாக பீகார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலா 9 எம்.எல்.ஏ.க்கள் மீது வழக்குகள் உள்ளன. தமிழ்நாட்டின் 5 எம்.எல்.ஏ.க்கள் மீதும் இந்த வழக்குகள் இருக்கின்றன.

வெறுப்புணர்வு பேச்சு வழக்கு நிலுவையில் உள்ள எம்.பி.க்களில் அதிகபட்சமாக 22 பேர் ஆளும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள். அதேபோல அதிகபட்சமாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் மீது வழக்குகள் இருக்கின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மாநில சட்டப்பேரவைகள், மக்களவை, மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 480 வேட்பாளர்கள், தங்கள் மீது வெறுப்புணர்வு பேச்சு வழக்கு இருப்பதை தெரிவித்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.