தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வீடு, அலுவலகம், மற்றும் அவருக்குச் சொந்தமான ஹோட்டல், பல் மருத்துவமனை, மருத்துக் கல்லூரி என அவருக்குத் தொடர்புடைய 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலைமுதல் ரெய்டு நடத்திவருகின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696492688_844_GridArt_20231005_110628471.jpg)
இந்த நிலையில், வருமான வரித்துறையின் இத்தகைய செயல்பாட்டுக்கு, பா.ஜ.க-வின் பழிவாங்கும் அரசியல் என தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், “ஒன்றிய பா.ஜ.க அரசின் பழிவாங்கும் அரசியலுக்கு எல்லையே இல்லை. ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கைக் கைதுசெய்ததும், தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகன் வீட்டில் சோதனை நடத்துவதும், சுதந்திரமான விசாரணை அமைப்புகளை, இந்தியா கூட்டணியின் தலைவர்களுக்கு எதிரான அரசியல் நோக்கங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தியதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகள்.
எதிர்க்கட்சித் தலைவர்களை இவ்வாறு திட்டமிட்டுத் துன்புறுத்துவது, ஜனநாயகத்தின்மீதான தாக்குதல். வெளிப்படையாகவும், நியாயமாகவும் இருக்க வேண்டும் என்று அமலாக்கத்துறையை உச்ச நீதிமன்றம் எச்சரித்ததை, பா.ஜ.க எளிதாக மறந்துவிடுகிறது. சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் அலட்சியப்படுத்துவதில் அவர்கள் குறியாக இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/09/GridArt_20230907_124024279.jpg)
எதிர்க்கட்சிகளிடையே வளர்ந்து வரும் ஒற்றுமையைக் கண்டு பா.ஜ.க அஞ்சுகிறது. அவர்கள் தங்களின் இத்தகைய வேலைகளை நிறுத்திவிட்டு, உண்மையான பிரச்னைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது” என்று பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, டெல்லி மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி முன்னாள் அமைச்சர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சூழலில், அதே வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை கைதுசெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.