அரூர்: தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிப் பணியாளர்களின் தொடர் போராட்டத்தால் பயிர்க்கடன், நகைக்கடன், உரம் பெற முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கடந்த 3-ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் சங்க செயலாளர்கள், உதவி செயலாளர்கள், எழுத்தர்கள், உரம் விற்பனையாளர்கள் என அனைத்து பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் கூட்டுறவு வங்கிகளின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடர்ந்து 3-வது நாளாக நீடித்தது. இதனால், உரம் வாங்க முடியாமலும், நகைக் கடன், பயிர்க் கடன் உள்ளிட்டவற்றை பெற முடியாமலும், மற்ற வங்கிக் கடன்களுக்கான தடையில்லா சான்று பெற முடியாமலும் அவதிக்குள்ளாகினர்.
போராட்டம் குறித்து தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளர்கள் சங்க மாநில இணைச் செயலாளர் செந்தில்குமார் கூறியதாவது: தமிழகத்தில் 4,350 கூட்டுறவு வங்கிகள் மற்றும் 150 நகர கூட்டுறவு வங்கிகள் உள்ள நிலையில் சுமார் 25 ஆயிரம் பணியாளா்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசின் கடன் தள்ளுபடி அறிவிப்பின் காரணமாக தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களுக்கு உண்டான தொகையை அரசு இதுவரை முழுமையாக திருப்பி தரவில்லை. இதனால் சங்ககளுக்கு கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கும் பணத்தை திருப்பி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், பல்வேறு திட்டங்களின் மூலமாக டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு விவசாய உபகரணங்களை வாங்குவதும், கிடங்குகள் கட்டுவதும் பெரும் இழப்பை ஏற்படுத்துகிறது. இதனை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும், என்றார்.
தருமபுரி மாவட்ட செயலாளர் நரசிம்மன் கூறுகையில், தருமபுரி மாவட்டத்தில் 134 கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் 550 பணியாளர்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், கடன் வழங்குதல், உரம் விற்பனை, டெபாசிட் சம்பந்தமான பணிகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன, என்றார்.