கோயில் பணத்தை அபகரிக்க முயன்ற குற்றச்சாட்டில் மத்தியப் பிரதேசத்திலிருந்து உத்தரப்பிரதேசத்துக்கு ஓடிவந்த சாமியாரை, மத்தியப் பிரதேச போலீஸ் அதிகாரிகள் சாதாரண பக்தர்கள்போல் சென்று கையும், களவுமாகப் பிடித்த சம்பவம், தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/WhatsApp_Image_2023_09_21_at_1_26_47_PM__1_.jpeg)
இதில் கைதுசெய்யப்பட்ட ராம் சரண் என்றறியப்படும் சாமியார், மத்தியப் பிரதேசத்தின் மொரேனாவிலுள்ள கோயிலுக்குச் சொந்தமான ஆறு ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் கட்டப்பட்ட கடைகளின் வாடகையை அபகரிப்பதற்காக, போலி அறக்கட்டளையை உருவாக்கியதாக, அவர்மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. பின்னர், இது தொடர்பாக முழு விவரமும் சம்பந்தப்பட்ட கோயிலின் தலைவருக்குத் தெரியவந்த பிறகு, 2022-ல் நவம்பர் 3-ம் தேதி ராம் சரண்மீதும் அவரின் கூட்டாளிகள்மீதும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, இதில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட போலீஸார், மூன்று பேரைக் கைதுசெய்தனர்.
ஆனாலும், ராம் சரண் மட்டும் எங்கேயோ தப்பித்துவிட்டார். இவ்வாறான சூழலில், ராம் சரண் உத்தரப்பிரதேசத்தின் மதுரா நகரிலுள்ள ராம் ஜானகி கோயில் ஆசிரமத்தில் தங்கியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது. இந்த விஷயம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்துக்குத் தெரியவரவே, உடனடியாக ராம் சரணைக் கைதுசெய்ய, போலீஸார் இரண்டு தனிப்படைகளை அமைத்தனர். சாதாரண பக்தர்கள்போல ராம் ஜானகி கோயிலுக்கு விரைந்த மத்தியப் பிரதேச போலீஸார், அங்கிருக்கும் பக்தர்களிடம் தங்களை பக்தர்களாகவே காட்டிக்கொண்டு, ` சாமியார் ராம் சரண் எங்கிருக்கிறார்?’ என்று கேட்டிருக்கின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/02/202ce0f6-1ba5-40c3-977a-f34ad7f9ccc1.jpg)
அதன் பின்னர், ராம் சரண் இருக்குமிடத்தை தெரிந்துகொண்ட போலீஸார், பக்தர்கள் வேடத்திலேயே மாலை மற்றும் இனிப்புகளுடன் அவரைச் சந்திக்கச் சென்றனர். அப்போது, அவர்களில் ஒருவர் ராம் சரணின் பாதத்தைத் தொடும்போது அவரிடம், `தங்களைக் கைதுசெய்ய மொரேனா சிவில் லைன்ஸிலிருந்து வந்திருக்கிறோம்’ என்று கூறினார். மேலும், கோயிலுக்கு வெளியே போதுமான எண்ணிக்கையில் போலீஸார் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அடுத்த சில நிமிடங்களில் போலீஸாரிடம் சரணடைந்த ராம் சரண், மொரேனா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார்.