ஹைதராபாத் :தமிழகத்தை தொடர்ந்து, தெலுங்கானாவிலும் அரசு பள்ளி மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரத் ராஷ்டிர சமிதி ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு பள்ளிகளில் படிக்கும், 1 – 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்காக, முதல்வர் காலை சிற்றுண்டி திட்டம் நேற்று துவங்கப்பட்டது.
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும், 1 – 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் அமலில் உள்ள நிலையில், தெலுங்கானா அரசும் இதுபோன்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இத்திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், மாநில அமைச்சருமான கே.டி.ராமா ராவ், பள்ளி மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிட்டார்.
இத்திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு இட்லி- – சாம்பார், கோதுமை ரவா உப்புமா, பூரி- உருளைக்கிழங்கு குருமா, கிச்சடி, தினை இட்லி, பொங்கல் உள்ளிட்டவை பள்ளி வேலை நாட்களில் வழங்கப்பட உள்ளன.
தெலுங்கானா சட்ட சபை தேர்தல் தேதிவிரைவில் அறிவிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டால், தேர்தல் நன்னடத்தை விதிகள் காரணமாக, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முடியாது.
இதனால், விஜயதசமி பண்டிகை அன்று துவங்கவிருந்த சிற்றுண்டி திட்டத்தை, முதல்வர் சந்திரசேகர ராவ் முன்கூட்டியே அறிமுகப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement