சென்னை: தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர் சாகுபடிக்கு ஹெக்டேருக்கு ரூ.13,500 இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை பயிர் சாகுபடி செய்வதற்காக நடப்பாண்டில் ஜூன் 12-ம் தேதிமேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை தமிழக அரசு திறந்தது. ஆனால், தென்மேற்கு பருவமழைகுறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து எதிர்பார்த்த அளவுக்கு தண்ணீர் திறக்கப்படாததாலும் மற்றும் பெரும்பாலான பகுதிகளில்நீர்நிலைகளையும், வரத்துக் கால்வாய்களையும் தூர்வாரும் பணிகள் முழுமை அடையாததாலும் குறுவைப் பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கவில்லை.
குறிப்பாக, கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையாததால், குறுவை பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டது.
5 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலானபரப்பில் குறுவை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலையில், சுமார் 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில்மட்டுமே அறுவடை நடைபெற்றதாகவும், மீதமுள்ள 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்களை காப்பாற்றுவதற்கு வழியே இல்லாமல் போனதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து, குறுவை சாகுபடி பாதிப்பு மற்றும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 7-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். வேளாண்மைத் துறை அமைச்சர், செயலாளர் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
அதில், காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்ட குறுவை பயிர் சாகுபடி குறித்து கணக்கெடுப்பு நடத்தி இழப்பீடு வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி அதிகாரிகள் கள ஆய்வுசெய்தனர். இந்நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசுநேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், குறுவை சாகுபடி செய்வதற்குஏதுவாக, முதல்வர் மு.க.ஸ்டாலினால் கடந்த ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், காவிரி ஆற்றில் கர்நாடக மாநிலத்திலிருந்து போதிய அளவு தண்ணீர் தொடர்ந்து பெறப்படாத காரணத்தால், மேட்டூர் அணையிலிருந்து விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் திறந்து விட இயலாத நிலையில், தற்போது டெல்டாமாவட்டங்களில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
பயிர் பாதிப்பு விவரங்கள் முறையாக கணக்கிடப்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500 இழப்பீடாக வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிவாரணம் போதுமானதல்ல: இதற்கிடையே தமிழக அரசின்நிவாரணத் தொகை போதுமானதல்ல என்றும், கூடுதலாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி கூறும்போது, ‘‘குறுவை பாதிப்புக்குஏக்கருக்கு ரூ.5,400 நிவாரணம்அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு பேரிடியாகும். தேசிய பேரிடர் ஆணையத்தின் வரன்முறையின்படி 33 சதவீதத்துக்கும் கீழ் மகசூல்பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே அதற்கு நிவாரணம் கொடுக்க வேண்டும் என்கிற முறை ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. தமிழக அரசு இந்தவரன்முறையை கணக்கில் கொள்ளாது, விவசாயிகள் நம்பிக்கையுடன் எதிர்பார்த்த ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்’’ என்றார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி.நடராஜன் கூறும்போது, ‘‘ஒருஏக்கர் சாகுபடிக்கு மாநில அரசின்கூட்டுறவு வங்கி மூலம் ரூ.37,000கடன் பெறுகிறபோது, ஏக்கருக்கு ரூ.5,400 தருவது ஏற்புடையதல்ல.
காய்ந்து கருகி போன பயிர்கள்2 லட்சம் ஏக்கர் உள்ள நிலையில் 40ஆயிரம் ஏக்கர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்திருப்பதை ஏற்க முடியாது. நிவாரண தொகையை ரூ.35 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்’’ என்றார்.