பெங்களூரு: பெங்களூருவில் காவல் ஆணையர் வீட்டின் அருகில் ரூ.10 லட்சம் மதிப்பில் பொருத்தப்பட்டிருந்த பயணிகள் நிழற்குடை திருடப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கன்டோன்மெண்ட் ரயில் நிலையத்துக்குச் செல்லும் வழியில் கன்னிங்கம் சாலை உள்ளது. இங்குள்ள பேருந்து நிறுத்தத்தில் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம், ஹென்னூர், பானஸ்வாடி, நாகவாரா ஆகிய முக்கிய இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. இங்கு பயணிகள் வசதிக்காக கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி ரூ. 10 லட்சம் மதிப்பில் துரு பிடிக்காத எஃகில் செய்யப்பட்ட பயணிகள் நிழற்குடை பொருத்தப்பட்டது.
இந்நிலையில் ஆகஸ்ட் 28ம் தேதி இரவு இந்த நிழற்குடை திடீரென காணாமல் போனது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாநகராட்சி அதிகாரிகள் பெங்களூரு ஹைகிரவுண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
பெங்களூருவில் உள்ள தலைமை செயலகத்துக்கு 1 கிமீ தூரத்தில், காவல் ஆணையர் வீட்டின் பின்பக்கத்திலும் இருந்த பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடை காணாமல் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.