‘Action Speaks Louder than Words!’ என்பார்களே அதை நேற்று இங்கிலாந்துக்கு உணர்த்திவிட்டிருக்கிறது நியூசிலாந்து. ‘எங்களை டிஃபண்டிங் சாம்பியன் என அழைக்காதீர்கள். எங்களுக்கு டிஃபன்ஸ் என்கிற வார்த்தையிலேயே உடன்பாடில்லை. நாங்கள் அட்டாக்கிங் கிரிக்கெட் ஆட வந்திருக்கிறோம்.’ என மைக் கிடைத்தாலே இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர் ஆவேசமாக பேச தொடங்கிவிடுகிறார். ஆனால், இப்படி பேச்சுகளில் வீரியத்தை காட்டுவதை விட ஆட்டத்தில் காட்டுவதே சிறப்பாக இருக்கும் என்பதை நியூசிலாந்து நிரூபித்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/the_final__7_.jpg)
அணியின் முக்கிய வீரரான கேன் வில்லியம்சன் காயம் காரணமாக ப்ளேயிங் லெவனில் இல்லை. டிம் சவுதி இல்லை, லாக்கி ஃபெர்குசன் இல்லை. இப்படியாக முக்கியமான வீரர்கள் இல்லாத போதும் நியூசிலாந்து அணியால் வெல்ல முடிந்தது. காரணம், அவர்கள் செய்ய வேண்டியவற்றை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சரியாக செய்து முடித்தார்கள். இந்தியாவில் போட்டி நடைபெறுகிறது, அதுவும் அஹமதாப்பாத்தில் போட்டி நடைபெறுகிறது எனில், அணிகளின் ஸ்பின் செயல்பாட்டைப் பொறுத்துதான் வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/20231006_111633.jpg)
அப்படியிருக்க நேற்றையப் போட்டியில் இங்கிலாந்து ஸ்பின் விஷயத்தில் ரொம்பவே தடுமாறியிருந்தது. இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்களை எடுத்திருந்தனர். இங்கிலாந்து இழந்த இந்த 9 விக்கெட்டுகளில் 5 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராகவே இழந்திருந்தனர். அதிலும், இன்னும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியது. டாப் 5 பேட்டர்களில் நான்கு பேர் ஸ்பின்னர்களிடம் வீழ்ந்திருந்தனர். மேட் ஹென்றி மலானின் விக்கெட்டை வீழ்த்திக் கொடுத்தார். அதன்பிறகு, தொடர்ச்சியாக 4 விக்கெட்டுகளை ஸ்பின்னர்களுக்கு எதிராக இழந்திருந்தனர். பேர்ஸ்ட்டோ, ரூட், ஹாரி ப்ரூக், மொயீன் என நால்வரும் சாண்ட்னர், ரச்சின், க்ளென் பிலிப்ஸ் ஆகியோருக்கு எதிராக வீழ்ந்திருந்தனர். ரூட் மட்டும்தான் கொஞ்சம் நின்று நிதானமாக ஆடியிருந்தார். மற்றவர்களெல்லாம் அவசர கதியில் வீழ்ந்து போயினர். ஹாரி ப்ரூக்கெல்லாம் ரச்சினின் அந்த ஓவரில் அடி அடியென அடித்துவிட்டு அதே ஓவரில் அவுட்டும் ஆகியிருப்பார்.
இதேபோன்றுதான் எல்லாருமே. அட்டாக்கிங் கிரிக்கெட் ஓகேதான். இங்கிலாந்து உலகக்கோப்பையை வென்றதற்கே அதுதான் காரணம். ஆனால், தேவை என வரும்போது சூழலைப் பொறுத்தும் ஆடிதானே ஆக வேண்டும். அந்த 2019 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் ஸ்டோக்ஸ் அப்படித்தானே ஆடினார். இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாஸிர் ஹூசைன் பேசுகையில்,
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/17504646_1540111306007960_6370864958748317574_o.jpg)
‘கீழே வரை பேட்டிங் வைத்திருக்கிறார்கள். நாம் அவுட் ஆனாலும் அடுத்து ஒரு பேட்டர் இருக்கிறார் என்கிற எண்ணம்தான் அனைவருக்கும் இருக்கும். ஆனால், இங்கே அது தேவைப்படவில்லை. சூழலைப் பொறுத்து பொறுப்பை முதுகில் ஏற்றிக் கொண்டு யாராவது ஆடியிருக்க வேண்டும். ஸ்டோக்ஸ் இருந்திருந்தால் அப்படி செய்திருப்பார்.’ என இங்கிலாந்து அணியின் தோல்வி குறித்து தன்னுடைய பார்வையை முன் வைத்திருக்கிறார் நாஸிர் ஹூசைன்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/36cb03dacd99847dad1ccabbbaa884f1_XL.jpg)
பௌலிங்கிலும் இங்கிலாந்து ஸ்பின்னர்களால் சாதிக்க முடியவில்லை. நியூசிலாந்து ஸ்பின்னர்கள் மூவர் இணைந்து 23 ஓவர்களில் 130 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர். இங்கிலாந்து அணியில் மூன்று ஸ்பின்னர்கள் இணைந்து 19.2 ஓவர்களை வீசி 131 ரன்களை கொடுத்து ஒரு விக்கெட்டை கூட எடுக்கவில்லை.
இரண்டு பேருமே இடதுகை பேட்டர்கள் என்பதால் மொயீன் அலி பயன்படுவார் என நினைத்தார்கள். பயனில்லாமல் போனது. லிவிங்ஸ்டன் ஆஃப் ஸ்பின் லெக் ஸ்பின் என இரண்டையும் மாற்றி மாற்றி வீசுவார் அவராவது எதுவும் தாக்கத்தை ஏற்படுத்துவாரென்றால் அதுவும் இல்லை. அடில் ரஷீத்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.
வேகப்பந்து வீச்சாளர்களை பற்றி சொல்லவே வேண்டாம். அவர்கள் ரன்களை வாரி வழங்கிக் கொண்டிருந்தனர். 150 கி.மீ க்கு நெருக்கமாக வீசும் மார்க் வுட் மட்டும் 5 ஓவர்களில் 55 ரன்களை கொடுத்திருந்தார். அவருக்கு எதிராக கான்வே மட்டும் 38 ரன்களை அடித்திருந்தார். சென்னை அணியில் இந்தியாவின் முக்கிய மைதானங்கள் அத்தனையிலும் ஆடிய அனுபவம் கான்வேக்கு பெரிய பலமாக இருந்தது. இன்னொரு பக்கம் ரச்சின் அத்தனை பௌலர்களையும் வெளுத்தெடுத்தார். ரச்சினை டாப் ஆர்டர் பேட்டராக மாற்றலாம் என்கிற ஐடியா அதன் முதல் பரிசோதனையிலேயே நியூசிலாந்துக்கு வெற்றியை கொடுக்க தொடங்கியிருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/20231006_111534.jpg)
‘அவர்கள் சிறப்பான ஷாட்களை ஆடினார்கள். அதில் தவறு ஏற்படும் வாய்ப்பு ரொம்பவே குறைவாக இருந்தது. டெவான் கான்வே பெரிய பெரிய ஷாட்களை ஆடும் வீரரல்ல. ஆனாலும் ரன்களை குவித்தார். ரச்சினும் அப்படியாகத்தான் இருக்கிறார். இருவரும் சிறப்பாக ஆடியிருந்தார்கள்.’ என பாராட்டியிருக்கிறார் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர். மேலும் பேசியவர்,
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/GettyImages_1708349939.jpg)
‘நியூசிலாதின் பேட்டிங்கை பார்த்து சொல்லவில்லை. நாங்கள் கொஞ்சம் சுமாராகத்தான் பேட்டிங் ஆடியிருந்தோம். நாங்கள் 330 ரன்களை அடிக்க நினைத்தோம். அது நடக்கவில்லை. ஆனாலும் அட்டாக்கிங் கிரிக்கெட்டை கைவிடமாட்டோம்.’ என ஜாஸ் பட்லர் நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.
லார்ட்ஸில் 2019 இல் இங்கிலாந்து வீரர்கள் துள்ளிக்குதிக்க நியூசிலாந்து அணி மொத்தமாக சோக முகத்தோடு ஓரமாக நின்றது. அங்கு விட்டதற்கெல்லாம் சேர்த்து வைத்து இங்கே பதிலடி கொடுத்திருக்கிறது. அதுவும் சாதாரணமாக அல்ல. இங்கிலாந்து ரொம்பவே உயர்வாக நினைத்த அந்த அட்டாக்கிங் அணுகுமுறையையே தகர்த்து அவர்களின் நம்பிக்கையின் மீதே கேள்வியை எழுப்பி வென்றிருக்கிறது.
வாழ்த்துகள் ப்ளாக் கேப்ஸ்!