மும்பை: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தை வெடி வைத்து தகர்க்கப்போவதாகவும், பிரதமரையும் கொல்ல இருப்பதாகவும் மின்னஞ்சல் மூலம் மும்பை போலீஸாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இரவு மும்பை போலீஸாருக்கு ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அதில் பிரதமர் மோடியும், அகமதாபாத்தில் உள்ள விளையாட்டு மைதானமும் குண்டுவைத்து அழிக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. சிறையில் உள்ள கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோயை விடுவிக்க வேண்டும். கூடவே ரூ.500 கோடி பணமும் தர வேண்டும். இல்லாவிட்டால் சதித் திட்டம் நிறைவேற்றப்படும். அதற்காக ஆட்கள் தயார் நிலையீல் உள்ளனர் என்று அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தொடர் மிரட்டல்கள்: ஏற்கெனவே காலிஸ்தான் பிரிவினைவாதக் குழுத் தலைவர் குருபத்வந்த் சிங் பன்னுன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரும் இதேபோல் இந்தியாவில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார். கனடாவில் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் நிஜார் சிங் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில் தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்திருந்தார். இந்நிலையில் மும்பை போலீஸுக்கு வந்த இமெயில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலாவில் உள்ள அரசு அலுவலக சுவரில் காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுதப்பட்டிருந்தது. தர்மசாலாவில் சில உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தச் சூழலில் அங்கு காலிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பப்பட்டதால் போலீஸ் கண்காணிப்பை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
யார் இந்த லாரன்ஸ் பிஷ்னோய்? மும்பை போலீஸுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் லாரன்ஸ் பிஷ்னோய் விடுதலையைக் கோரியுள்ள நிலையில் யார் இந்த லாரன்ஸ் என்ற கேள்வி எழலாம்.
பஞ்சாபின் பெரோஸ்பூரை சேர்ந்தவர் லாரன்ஸ் பிஷ்னோய் (30). ஹரியாணா காவலர் மகனான லாரன்ஸ், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்துள்ளார். கல்லூரி காலங்களில் மாணவர் பேரவை அரசியலில் தலையிட்டவருக்கு நண்பராக மாறினார் கோல்டி பிரார் எனும் சத்தீந்தர் சிங். 2010-ல் பட்டம் பெற்ற பின் சண்டிகரில் இருவரும் இணைந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபடத் துவங்கினர். இருவர் மீதும் கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி போன்ற 7 வழக்குகள் 2012 வரை பதிவாகின. இதற்காக கைதான பிஷ்னோய் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறை வாழ்க்கையில் அவர் தாதாவாக மாறினார். அங்கிருந்த சக கைதிகளின் நட்பை பெற்றவர் விடுதலையாகி ஆயுதக் கடத்தலில் இறங்கினார். அப்போது, தன்னுடன் மோதிய முக்ஸ்தர் என்பவரை சுட்டுக் கொலை செய்தார் பிஷ்னோய். அதன் பின்னர் கைது, சிறைவாசம் என பிஷ்னோய் அசைக்க முடியாத தீய சக்தியாக வளர்ந்தார். பஞ்சாப் மட்டுமல்லாது ராஜஸ்தானிலும் அவர் ஆதிக்கம் பரவியது.பல மாநிலங்களில் குற்றங்கள் செய்த பிஷ்னோய் கும்பலுக்கு வெளிநாடுகளிலும் தொடர்புகள் உள்ளன. தனது சர்வதேசக் கும்பலுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடி சிறை காவலர்கள் உதவியால் போனில் உத்தரவிடுவதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.