திருப்பூரின் மையப் பகுதியான சூசையாபுரத்தில், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகள், தங்கள் குடியிருப்பு வழியாகப் பள்ளிக்குச் செல்வதைத் தடுக்க, ஆதிக்க சாதியினர் பொதுவழிகளை அடைத்து, தீண்டாமைச் சுவர் எழுப்பி யிருப்பதாகச் சர்ச்சை எழுந்தது.
அதாவது, திருப்பூர் மாநகராட்சியின் 37-ஆவது வார்டு ராயபுரம் பிரதான சாலை – சூசையாபுரம் பகுதியை இணைக்கும் பொது வழி மற்றும் அதன் அருகில் உள்ள சித்தப்பா அவென்யூவில் உள்ள பொது வழியை ஆக்கிரமித்து சுவர் எழுப்பப்பட்டிருந்தது. இதனால், சூசையபுரம் பகுதியில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகள் 100 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு சுமார் 1 கிலோ மீட்டர் வரை நடந்து சென்று வந்தனர்.
இந்த தீண்டாமைச் சுவர் குறித்து ஜூனியர் விகடனில், “நூறு மீட்டருல இருக்கிற பள்ளிக்கு குழந்தைங்க ஒரு கிலோ மீட்டர் சுத்திப் போறாங்க..திருப்பூரிலும் தீண்டாமைச் சுவர் அவலம்?” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதையடுத்து, அப்பகுதிகளில் மாநகராட்சி உதவி ஆணையர் வினோத் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆவணங்களுடன் புத்தகம் வெளியான இன்றே ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் அடிப்படையில் பொதுவழியை ஆக்கிரமித்து சுவர் எழுப்பப்பட்டிருந்ததும், அந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமானதும் தெரியவந்தது.
இதையடுத்து, ராயபுரம் பிரதான சாலையையும் – சூசையாபுரத்தையும் இணைக்கும் சாலையில் எழுப்பப்பட்டிருந்த சுவரை பொக்லைன் உதவியுடன் இடித்து அகற்றினர். கொங்குநாடு முன்னேற்றக் கழக தலைவர் பெஸ்ட் ராமசாமியின் வீடு இருக்கும் பெஸ்ட் அவென்யூ நுழைவு வாயிலில் உள்ள இரும்பு கேட்டை தாங்களே அப்புறப்படுத்திக் கொள்வதாக பெஸ்ட் ராமசாமி தரப்பினர் உறுதி அளித்ததுள்ளதாகவும், திங்கள்கிழமைக்குள் அதுவும் அகற்றப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்தனர். இந்தச் சுவர் இடிக்கப்பட்டதால், தங்களின் 30 ஆண்டுகால போராட்டத்துக்கு விடை கிடைத்திருப்பதாக சூசையாபுரம் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.