ஆக்ரா,உத்தர பிரதேசத்தில், ‘டியூஷன்’ ஆசிரியரை, அவரிடம் பயின்ற மாணவர்கள் இருவர் துப்பாக்கியால் சுட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேசத்தின் ஆக்ராவை அடுத்த காண்டோலி நகரில், உயர்கல்வி மாணவர்களுக்கான தனியார் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது.
சுமித் சிங் என்ற ஆசிரியர் இந்த பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார்.
இவரிடம் ஏற்கனவே பயின்ற, 16 வயது மாணவர் ஒருவர், பயிற்சி மையத்தில் உடன் பயிலும் மாணவியை காதலித்துள்ளார். இதை கண்டித்த சுமித், இது தொடர்பாக மாணவரின் குடும்பத்தினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பயிற்சி மையத்தில் இருந்த ஆசிரியரை நேற்று முன்தினம் வெளியே அழைத்த சம்பந்தப்பட்ட மாணவர் மற்றும் அவரது, 18 வயது நண்பர் ஆகியோர், சுமித்தின் காலில் துப்பாக்கியால் சுட்டனர்.
அதை தங்கள் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்த அவர்கள், ‘ஆசிரியரை, 40 முறை சுட வேண்டும் என முடிவு செய்திருந்தோம். இன்னும், 39 முறை பாக்கி உள்ளது.
‘ஆறு மாதங்களில் திரும்பி வந்து அவரை மீண்டும் சுடுவோம்’ என, சினிமா பாணியில் மிரட்டல் விடுத்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார், மாணவர்கள் இருவரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘திரைப்படங்களைப் பார்த்து பெரிய ரவுடி ஆகும் ஆசையில், சமீபகாலமாக சிறுவர்கள் இதுபோன்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது நல்லதல்ல.
‘வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தைகளை முறையாக கண்காணித்து பராமரிக்க வேண்டியது அவசியம். ஆசிரியரை சுட்ட மாணவர்களுக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்’ என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்