புதுடெல்லி: நியூஸ்கிளிக் நிறுவனர் பிரபிர் புர்கயஸ்தா உட்பட இருவர் மீது பதிவு செய்யப்பட்ட எப்ஐஆர், கைது நடவடிக்கை, ரிமாண்ட் ஆகியவற்றுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சீன நிறுவனங்களிடம் பணம் பெற்று இந்தியாவுக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாக குற்றம்சாட்டப்பட்ட நியூஸ்கிளிக் செய்தி நிறுவனத்தின் ஆசிரியர் மற்றும் நிறுவனருமான பிரபிர் புர்கயஸ்தா மற்றும் மனிதவளப் பிரிவின் தலைவர் அமித் சக்ரவர்த்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரணைக்காக போலீஸ் காவலில் அனுப்ப கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் டெல்லி போலீஸார் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்த மனுவில் கூறியதாவது:
சீன நிறுவனங்களின் நிதியுதவி பெற்று காஷ்மீரும், அருணாச்சலப் பிரதேசம் சர்ச்சைக்குரிய பகுதிகள் என செய்தி வெளியிடும் சதியில் நியூஸ்கிளிக் ஆசிரியர் பிரபிர் புர்கயஸ்தா ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான இ-மெயில்களை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கை பரப்புத்துறையில் தீவிர உறுப்பினராக இருக்கும் நெவிலி ராய் சிங்கம் மற்றும் சீனாவில் உள்ள அவரது ஸ்டார் ஸ்டிரீம் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோர் அனுப்பியுள்ளனர்.
இவ்வாறு டெல்லி போலீஸார் கூறியிருந்தனர். இதையடுத்து பிரபிர் புர்கயஸ்தா மற்றும் அமித் சக்ரவர்த்தி ஆகியோரை 7 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பாட்டியாலா நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் நியூஸ்கிளிக் நிறுவனம் சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
9-ம் தேதி விசாரணை: இந்த மனுக்கள் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷர் ராவ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நியூஸ்கிளிக் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ஆஜராகி இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதை நீதிபதி துஷர் ராவ் ஏற்றுக்கொண்டார். புர்கயஸ்தா மற்றும் சக்ரவர்த்தி ஆகியோர் தங்கள் வழக்கு நிலுவையில் இருக்கும் வரை தங்களை விடுவிக்க கோரிக்கை விடுத்துள்ளது குறித்து, டெல்லி போலீஸார் வரும் 9-ம் தேதி பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.