தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின்
திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் மீது சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்து புகாரில், நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டமொன்றை தான் தொடங்க இருப்பதாகவும், ரூபாய் 200 கோடி முதலீடு செய்தால் இரண்டு மடங்கு லாபம் வரும் என்று சொல்லி தன்னிடத்தில் அவர் பண மோசடி செய்துவிட்டதாக அந்த புகாரில் தெரிவித்திருந்தார்.
இதன் அடிப்படையில் கடந்த மாத ஏழாம் தேதி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை காவல்துறை கைது செய்தது. அதையடுத்து அவரது தரப்பிலிருந்து இரண்டு முறை ஜாமின் மனு தாக்கல் செய்த போதும் அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது, அவரது வங்கிக் கணக்கில் உள்ள பண பரிவர்த்தனை தொடர்பாக முழு விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதி, 5 கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்துமாறு சொல்லி ரவீந்திரன் சந்திரசேகருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.