கேங்டாக்,சிக்கிமில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 21 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 103 பேரை தேடும் பணியில், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர்.
வடகிழக்கு மாநிலமான சிக்கிமின் லாச்சென் பள்ளத்தாக்கில், சமீபத்தில் திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதில், லோனாக் ஏரி நிரம்பி, தீஸ்தா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால், சுங்தாங் பகுதியில் உள்ள நீர்மின் திட்ட அணை உடைந்ததால், மங்கன், கேங்டாக், நாம்சி, பாக்யாங் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த மாவட்டங்களில் முக்கிய சாலைகளில் வெள்ள நீர் வழிந்தோடுவதால், சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மழை, வெள்ளத்தால் பலியானோரின் எண்ணிக்கை, 21 ஆக அதிகரித்துஉள்ளது.
காணாமல் போன, 22 ராணுவ வீரர்கள் உட்பட, 103 பேரை தேடும் பணியில், ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுஉள்ளனர்.
சுற்றுலா தலங்களில் சிக்கியுள்ள, 3,000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணியரை மீட்கும் பணியும் துரிதப்படுத்தப் பட்டுள்ளது.
இது குறித்து சிக்கிம் முதல்வர் பிரேம் சிங் தமாங் கூறியதாவது:
மாநிலத்தில், 24 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்த சிக்கிம் ஜனநாயக முன்னணி அரசு, தரமற்ற முறையில் கட்டிய தால், சுங்தாங் அணை உடைந்தது.
பல்வேறு இடங்களில் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. பெரியளவில், மாநிலத்தில் சேதம் ஏற்பட்டுஉள்ளது. விரைவில், மாநிலத்தில் இயல்புநிலை திரும்பும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிறுவன் பரிதாப பலி
சிக்கிமின் தீஸ்தா நதியில் அடித்துச் செல்லப்பட்ட ராணுவத்துக்குச் சொந்தமான பீரங்கி குண்டு, மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் கரை ஒதுங்கியது. சம்பதங்கா என்ற கிராமத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், இந்த குண்டை வீட்டிற்கு எடுத்துச் சென்றார். பழைய பொருட்கள் கடையில் எடைக்கு போடுவதற்காக, பீரங்கி குண்டை அந்த நபர் உடைக்க முயன்றார். அப்போது, குண்டு வெடித்துச் சிதறியதில், சிறுவன் ஒருவன் உயிரிழந்த நிலையில், ஐந்து பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்