IND Vs AUS, ODI World Cup: 36 ஆண்டுகளுக்கு முன் ஒரு ரன்னில் நழுவிய வெற்றி! இந்திய அணி மாற்றுமா?

ஐசிசி ஒருநாள் உலக கோப்பை கிரிகெட் பயணத்தை அக்டோபர் 8 ஆம் தேதி முதல் இந்திய அணி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதேபோல் இந்திய கிரிக்கெட் அணியும், ஆஸ்திரேலிய அணியும் 36 ஆண்டுகளுக்கு முன்பு இதே சேப்பாக்கம் மைதானத்தில் உலக கோப்பை முதல் ஆட்டத்தில் மோதின. அதில் இந்திய அணி ஒரு ரன்னில் வெற்றி வாய்ப்பை இழந்தது. 

36 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன? 

36 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. டாஸ் வெற்றி பெற்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடியது. அப்போது, 6 விக்கெட்டுக்கு 270 ரன்கள் ஆஸ்திரேலிய அணி எடுத்தது. ஜெஃப் மார்ஷ் 141 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 110 ரன்கள் எடுத்தார். டேவிட் பூன் 49 ரன்களிலும், டீன் ஜோன்ஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் ஸ்டீவ் வாக் அற்புதம் 

இலக்கை துரத்திய இந்திய அணி 49.5 ஓவரில் 269 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக நவ்ஜோத் சித்து 73 ரன்களும், கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் 70 ரன்களும் எடுத்தனர். கிரேக் மெக்டெர்மாட் அதிகபட்சமாக நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டியின் கடைசி ஓவரை ஸ்டீவ் வாக் வீசினார். அதில் மனிந்தர் சிங்கை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றியை தந்தார். இதுவரை சென்னையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையே மூன்று ஒருநாள் போட்டிகள் நடந்துள்ளன. அதில் ஆஸ்திரேலிய அணி இரண்டிலும், இந்தியா ஒரு போட்டியில் வெற்றி பெற்றன. 

கடைசியாக இந்த மைதானத்தில் இருவரும் சந்தித்தபோது ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஒட்டுமொத்தமாக 12 போட்டிகள் நடந்துள்ளன. அதில் இந்தியா நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்னை மைதானத்தில் இந்திய அணி மொத்தம் 14 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது. 7 போட்டிகளில்  வெற்றியும், 6 போட்டிகளில் தோல்வியும் தழுவியுள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா ஒருநாள் சாதனை (சேப்பாக்கத்தில்)

– 9 அக்டோபர் 1987 – ஆஸ்திரேலியா 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
– 17 செப்டம்பர் 2017 – இந்தியா 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
– 22 மார்ச் 2023 – ஆஸ்திரேலியா 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

சேப்பாக்கத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் முக்கிய பங்கு

சேப்பாக்கின் ஆடுகளம் பொதுவாக சுழற்பந்து வீச்சாளர்களுக்கு உதவிகரமாக கருதப்படுகிறது. நிறைய திருப்பங்கள் காணப்படுகின்றன. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா, ஆர். அஸ்வின், குல்தீப் யாதவ் போன்ற உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆஸ்திரேலியாவில் ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர் மற்றும் க்ளென் மேக்ஸ்வெல் உள்ளனர். இவர்களின் சிறப்பான பந்துவீச்சு ஆட்டத்தின் போக்கை மாற்றும். 

உலகக் கோப்பையில் இந்திய அணியின் முழுமையான அட்டவணை

– 8 அக்டோபர் எதிராக ஆஸ்திரேலியா, சென்னை
– 11 அக்டோபர் vs ஆப்கானிஸ்தான், டெல்லி
– அக்டோபர் 14 vs பாகிஸ்தான், அகமதாபாத்
– 19 அக்டோபர் vs பங்களாதேஷ், புனே
– 22 அக்டோபர் vs நியூசிலாந்து, தர்மசாலா
– 29 அக்டோபர் vs இங்கிலாந்து, லக்னோ
– 2 நவம்பர் vs இலங்கை, மும்பை
– நவம்பர் 5 vs தென்னாப்பிரிக்கா, கொல்கத்தா
– நவம்பர் 12 vs நெதர்லாந்து, பெங்களூரு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.