மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கப்படுகிறது. எனவே, பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் ஐந்து மாநிலங்களிலும் சில மாதங்களுக்கு முன்பிருந்தே தேர்தல் வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்ட நிலையில், தற்போது அதற்கான தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Ashok_Gehlot_rahul_rajast.jpg)
மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் இன்று அறிவித்திருக்கிறார். அதன்படி, சத்தீஸ்கரில் வரும் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மிசோரத்தில் நவம்பர் 7-ம் தேதியும், மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17-ம் தேதியும், ராஜஸ்தானில் நவம்பர் 23-ம் தேதியும், தெலங்கானாவில் நவம்பர் 30-ம் தேதியும் தேர்தல் நடைபெறும் என்று ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்தார்.
ராஜஸ்தானிலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சியும், தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி ஆட்சியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியும் நடைபெற்றுவருகின்றன. ராஜஸ்தான் 200 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அங்கு, முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் இடையே உள்கட்சி மோதல் நடைபெற்றுவருவது, காங்கிரஸுக்கு அது பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு பிரச்னையை சரிசெய்ததைத் தொடர்ந்து நிலைமை சீரானது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/48859_thumb.jpg)
இந்தச் சூழலில், ராஜஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டுமென்று பா.ஜ.க துடிக்கிறது. சமீபத்தில் அங்கு ரூ.7,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ராஜஸ்தானில் காங்கிரஸுக்குள் நடப்பதைப்போல, பா.ஜ.க-வுக்கு உள்ளேயும் கோஷ்டி மோதல்கள் நடக்கின்றன. இந்த முறை, பா.ஜ.க-வின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவுக்கு முதல்வராகும் வாய்ப்பு தரப்படவில்லை. அதனால் ஏற்பட்டிருக்கும் உள்கட்சிப் பூசல்களை சமாளிக்க, முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க பா.ஜ.க முடிவுசெய்தது.
மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாஜ.க ஆட்சி நடைபெறுகிறது. 230 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட அந்த மாநிலத்தில், 2018 சட்டமன்றத் தேர்லில் காங்கிரஸ் கட்சியே வெற்றிபெற்றது. கமல்நாத் தலைமையில் ஓராண்டு காலம் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற நிலையில், ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் பா.ஜ.க-வுக்கு தாவியதால், பா.ஜ.க அதிகாரத்தைக் கைப்பற்றியது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/49359_thumb.jpg)
கடந்த சில மாதங்களாக பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பதில் பெரும் போட்டியே நடந்தன. பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை பா.ஜ.க அரசு தொடங்கியது. காங்கிரஸோ, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 வழங்குவோம்’ என்று கூறியது. அங்கு, பா.ஜ.க-வுக்கும் காங்கிரஸுக்கும் இடையே கடும் போட்டி நிலவுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
தெலங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக பா.ஜ.க தீவிரமாக வேலை செய்துவருகிறது. அதே நேரம், கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற பெரும் வெற்றிக்குப் பிறகு, தெலங்கானாவில் காங்கிரஸின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Chandrasekhar_Rao_EPS.avif.jpeg)
அதனால், காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டியில் இருக்கிறது. பாரத ராஷ்டிர சமிதியிலிருந்து 12 முன்னாள் அமைச்சர்கள் உள்பட 35 முக்கிய நிர்வாகிகள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்தது, காங்கிரஸ் கட்சிக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பா.ஜ.க என மும்முனைப் போட்டியாக தெலங்கானா தேர்தல் களம் மாறியிருக்கிறது.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுவருகிறது. அங்கு காங்கிரஸுக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலையில், காங்கிரஸ் அரசு மீது கடும் அதிருப்தி இல்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன. அதனால், மீண்டும் அங்கு காங்கிரஸ் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/zoram.jpg)
மிசோரம் மொத்தம் 40 தொகுதிகளைக் கொண்ட சிறிய மாநிலம். அங்கு, முதல்வர் சோரம்தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தில், ஒரு தொகுதியில் வென்று கடந்த முறை பா.ஜ.க கால்பதித்தது. அப்படியே, அந்த மாநிலத்தின் ஆட்சியிலும் இணைந்துகொண்டது பா.ஜ.க. தற்போது, காங்கிரஸ் கட்சியில் அங்கு தீவிர கவனம் செலுத்திவருகிறது. ஆனாலும், மிசோ தேசிய முன்னணி வெற்றிபெறவே வாய்ப்பு இருக்கிறது என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.