2019 உலகக் கோப்பை போல் காவி நிற ஜெர்ஸியில் இந்தியா… அதுவும் பாகிஸ்தானுக்கு எதிராக?

Indian Team Saffron Jersey: உலகக் கோப்பை தொடரில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான லீக் சுற்று போட்டி நேற்று ( அக். 8) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியாவை இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தாலும், இந்திய அணியின் தொடக்க கட்ட பேட்டிங் என்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

உற்சாகத்தில் இந்தியா 

200 ரன்கள்தான் என்றபோது, இஷான் கிஷன், ரோஹித் சர்மா, ஷ்ரேயாஸ் ஐயர் என அனைவருமே டக்-அவுட்டானது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ரசிகர்களுக்கு அளித்தது. அதன்பின், விராட் கோலி – கே.எல். ராகுலின் நிதான பார்ட்னர்ஷிப் இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தந்தது. ராகுல் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 97 ரன்களையும், விராட் கோலி 85 ரன்களையும் என எடுத்தனர். முன்னதாக, ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப், பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

இந்திய அணி, உலகக் கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே வெற்றிப் பெற்றிருப்பது அந்த அணிக்கு வரும் போட்டிகளில் சாதகமாக அமையும். மேலும், சிறு சிறு தவறுகளை திருத்திக்கொள்வதன் மூலம் இந்தியா இன்னும் வலிமையாகும். குறிப்பாக, கில் ஓப்பனராக அணிக்கு திரும்பும்போது, இந்திய அணிக்கு பலம் சேர்க்கும். எனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி இந்திய அணிக்கும், அதன் ரசிகர்களுக்கும் பெரும் உத்வேகத்தை அளிக்கும். 

அடுத்து ஆப்கான், பாகிஸ்தான்…

நடப்பு தொடரில் இந்தியா தனது அடுத்த போட்டியை நாளை மறுதினம் (அக். 11) விளையாடுகிறது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் அந்த போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மேலும், இந்த மைதானம் பெரிதும் பேட்டிங்கிற்கே சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. உதராணத்திற்கு, கடந்த தென்னாப்பிரிக்கா – இலங்கை போட்டியை எடுத்துக்கொள்ளலாம். அந்த போட்டியில் இரு அணிகளும் சுமார் 700 ரன்களுக்கு மேல் குவித்தது குறிப்பிடத்தக்கது. 

இது ஒருபுறம் இருக்க, ஆப்கானிஸ்தான் போட்டிக்கு அடுத்து இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த போட்டி அக். 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத் நகரில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பையில் இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது இல்லை. எனவே, அந்த வெற்றி பயணத்தை தொடர வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

காவி நிற ஜெர்ஸி 

இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா தனது வழக்கமான நீல நிற ஜெர்ஸிக்கு பதில் காவி நிற ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, இந்திய அணி முழுமையாக அல்லது நீலம் – காவி கலந்த விளையாடும் சீருடையை அணிய பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால், இந்த தகவலை பிசிசிஐ முற்றிலும் மறுத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐயின் கௌரவ பொருளாளர் ஆஷிஷ் ஷெலார் கூறுகையில்,”பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், வழக்கத்திற்கு மாறாக வேறு ஜெர்ஸியை இந்திய அணி அணியப்போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். இந்த அறிக்கைகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் ஒருவரின் கற்பனை ஆகும். நடப்பு ஆடவர் ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையில் இந்திய அணி நீல நிற ஜெர்ஸியில்தான் விளையாடும்” என்றார். 

முன்னதாக, சென்னை சேப்பாக்கம் மைாதனத்தில் வலைப்பயிற்சியின் போது இந்திய அணி காவி நிற ஆடையில் பயிற்சி மேற்கொண்டனர். இந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இந்திய அணி, இலங்கை அணிக்க எதிரான போட்டியின் போது காவி – நீல நிறம் கலந்த ஜெர்ஸியை அணிந்து விளையாடியது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.