Doctor Vikatan: சமீப காலமாக ஹிமாலயன் வாட்டர் என்ற பெயரில் பெரிய கடைகளில் பாட்டில்களில் மினரல் வாட்டர் விற்கப்படுகிறது. பிரபலங்கள் பலரும் அந்தத் தண்ணீரைக் குடிப்பதாகக் கேள்விப்படுகிறோம். அது எதற்கானது…. அதைக் குடிப்பதால் ஆரோக்கியம் மேம்படுமா?
– பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் ஐஸ்வர்யா முரளி
பிரபலங்கள், ஆரோக்கியத்தின் பேரில் அதீத அக்கறை கொண்டவர்கள் மத்தியில் சமீப காலமாகப் பிரபலமாகி வருகிறது ஹிமாலயன் வாட்டர். வழக்கமான தண்ணீரைவிட இது சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அது சேகரிக்கப்பட்டு, பாட்டில்களில் நிரப்பப்படுவதற்கு முன்பாக, இமயமலை மணல், பிளவு மற்றும் பாறைகளின் அடுக்குகள் வழியாக பல ஆண்டுகள் பயணிக்கிறது. அந்த நீரில் மெக்னீசியம், சோடியம், கால்சியம், பைகார்பனேட் போன்ற இயற்கை தாதுக்கள் நிறைந்துள்ளன. தவிர ஹிமாலயன் வாட்டரின் சுவை, வழக்கமான நீரைவிட சிறந்ததாக இருப்பதாக நம்பப்படுகிறது. அமில-காரத்தன்மையின் சமநிலையை பி.ஹெச் என்ற அளவீட்டால் குறிப்பிடுவோம். ஹிமாலயன் வாட்டரின் பி.ஹெச் பேலன்ஸ் 7.1 முதல் 7.7 வரை உள்ளது. அதாவது மைல்டான காரத்தன்மை கொண்டது.
காரத்தன்மை கொண்ட நீர் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இது ரத்த ஓட்டத்தில் அமிலத்தன்மையை நடுநிலையாக்க உதவி, ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது. ஆற்றல் மற்றும் வளர்சிதை மாற்றச் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஹிமாலயன் வாட்டரில் ஆன்டிஏஜிங் தன்மையும் நோய் எதிர்ப்பாற்றலும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனாலும் அது குறித்த ஆய்வுகள் இன்னும் நிறைய தேவை. அதன்பிறகுதான் இந்தத் தகவல்களை உறுதியாக ஏற்றுக்கொள்ள முடியும்.
அல்கலைன் என்கிற காரத்தன்மை உள்ள இந்த நீரைப் பருகுவதால் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு நல்லது என்ற கருத்தும் நிலவுகிறது. வொர்க்அவுட் செய்த பிறகு அல்கலைன் தண்ணீரைக் குடிப்பது வழக்கமான தண்ணீர் குடிப்பதைவிட 3 சதவிகிதம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது என்று மற்றோர் ஆய்வு சொல்கிறது.
தண்ணீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறோம் பலரும். அப்படியிருக்கையில் ஹிமாலயன் வாட்டரின் அதிகப்படியான விலை ஏற்புடையதாக இருக்காது. சாமானியர்களுக்கு அவ்வளவு விலை கொடுத்து வாங்கிப் பயன்படுத்துவது சாத்தியமில்லை. இத்தனை நல்ல தன்மைகள் கொண்ட ஹிமாலயன் வாட்டர், பிளாஸ்டிக் பாட்டில்களில்தான் நிரப்பப்பட்டு விற்பனைக்கு வருகிறது. பிளாஸ்டிக் கெடுதல் என பிரசாரம் செய்கிறோம். அதிலுள்ள ரசாயனங்கள், நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டை பாதித்து நோய் எதிர்ப்புத்திறனையும் மட்டுப்படுத்தக்கூடியவை.
பொதுவாகவே பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் phthalates எனப்படும் ரசாயனம் இருப்பதால், அவற்றின் நீண்டகால உபயோகம், ஆண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் மற்றும் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைதல் போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். அதைக் கருத்தில் கொண்டு தண்ணீரை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்வதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். ஹிமாலயன் வாட்டருக்கும் அதுவே பொருந்தும்.
உடலில் நீர் வறட்சி ஏற்படாதபடி போதுமான அளவு தண்ணீர் குடிப்பது ஆரோக்கியமானது. அதற்கு இப்படிப்பட்ட காஸ்ட்லியான தண்ணீர்தான் குடிக்க வேண்டும் என்றில்லை. காய்ச்சி, வடிகட்டி, ஆறவைத்த சுத்தமான தண்ணீரே ஆரோக்கியமானதுதான்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.