ஹெராத்: ஆப்கனிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
ஆப்கனிஸ்தானின் ஹெராத் நகருக்கு அருகே கடந்த 7ம் தேதி மிகப் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அடுத்தடுத்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகின. அதோடு, தொடர் நில அதிர்வுகளும் ஏற்பட்டன. இதன் காரணமாக பல கிராமங்கள் தரைமட்டமாகி, 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில், அதே ஹெராத் நகருக்கு 28 கிலோ மீட்டர் தொலைவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று இன்று ஏற்பட்டுள்ளது. இதுவும் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது. கடந்த நிலநடுக்கத்தின் பாதிப்பில் இருந்து அப்பகுதி மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.