ஜெருசலேம்: காசாவை ஒட்டியுள்ள தங்களுடைய எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் ஊடுருவிய, 1,500 ஹமாஸ் பயங்கரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. காசா எல்லையில் மூன்று லட்சம் இஸ்ரேல் வீரர்கள் குவிக்கப்பட்டு, தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள், பிணை கைதிகளை கொலை செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே, நீண்ட கால மோதல் உள்ளது. பாலஸ்தீனியர்களிடம் இருந்த காசா பகுதியை, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2007ல் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து, இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே மோதல் நடந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 6ம் தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள், இஸ்ரேல் மீது, 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை செலுத்தினர். இவற்றை பயன்படுத்தி, நிலம், கடல் மற்றும் வான் வழியாக ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தென்பகுதிக்குள் நுழைந்தனர்.
மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எல்லையை ஊடுருவி வந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், இஸ்ரேல் அரசை அதிர்ச்சிக்குள்ளாகியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீதான போரை இஸ்ரேல் அரசு அறிவித்தது.
பீரங்கி அரண்
பயங்கரவாதிகளை குறிவைத்து, காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை துவக்கியது. இந்த மோதல்களில், இஸ்ரேலில் 900க்கும் மேற்பட்டோரும், காசா பகுதியில் 700க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் போர் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்தது. காசா பகுதியை ஒட்டி, தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிக்குள் ஊடுருவிய, 1,500க்கும் மேற்பட்ட ஹமாஸ் பயங்கரவாதிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் நேற்று தெரிவித்தது.
நாட்டின் தென்பகுதி முழுதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும், எஞ்சியுள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் அனைவரும் கொல்லப்படுவர் என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், எல்லை பகுதிகளில் பீரங்கிகளை குவித்து பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, காசா பகுதியை நோக்கி, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து ஏவுகணை செலுத்தியும், வான் வழியாகவும் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில், பல கட்டடங்கள் தரைமட்டமாகின.
இஸ்ரேலுக்குள் நுழைந்து, அங்கிருந்து பிணை கைதிகளாக அழைத்து வரப்பட்டுள்ள 150க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள், ராணுவ வீரர்களை கொல்லப் போவதாக, ஹமாஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
காசா பகுதியை முழுதுமாக முற்றுகையிடப் போவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது. மேலும், காசா பகுதிக்கான மின்சாரம், உணவு மற்றும் எரிபொருள் வினியோகம் முழுமையாக நிறுத்தப்படும் என்று கூறியிருந்தது.
இதன்படி, காசா எல்லையில் முற்றுகையிட்டுள்ள மூன்று லட்சம் இஸ்ரேல் வீரர்கள், பயங்கரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில், காசா பகுதியில் 790 வீடுகள் தரைமட்டமானதாகவும், 5,330க்கும் மேற்பட்ட கட்டடங்கள் பலத்த சேதமடைந்து உள்ளதாகவும், ஐ.நா.,வின் மனிதநேய விவகாரத்துக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
தொடர் தாக்குதல்களால் பீதியடைந்துள்ள காசா மக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்காக எகிப்து எல்லையில் பெரும் அளவில் திரண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நிதி அமைச்சர் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜாவத் அபு கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அமைப்பின் நிதி நிர்வாகங்களை இவர் கவனித்து வந்ததாக தெரியவந்துள்ளது.
நிதி அமைச்சர் பலி
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில், ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் ஜாவத் அபு கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் நிதி நிர்வாகங்களை இவர் கவனித்து வந்ததாகவும், வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டும் பணியில் இவர் ஈடுபட்டு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.