காசா எல்லைகள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது: இஸ்ரேல் ராணுவம்| Israel-Hamas war: Israel claims to have recaptured Gaza border areas

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

ஜெருசலேம்: காசா எல்லைகள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு இடையிலான போர் 5வது நாளை எட்டியுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இஸ்ரேலில் 1,200 பேரும், காசாவில் 900 பேரும் உயிரிழந்துள்ளனர். ஹமாஸ் பயங்கரவாதிகள் 1,500 பேர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. காசா மீதான வான்வழி தாக்குதலுடன் தரைவழி தாக்குதலையும் அதிகரிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, அந்நாட்டின் தெற்கு பகுதியில் ராணுவ வீரர்கள், ரிசர்வ் படைகளை, ஆயுதங்களுடன் குவித்து வருகிறது.

இந்நிலையில், காசா எல்லைப்பகுதி தங்களது முழு கட்டுப்பாட்டில் வந்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் தான், ஹமாஸ் பயங்கரவாதிகள் தாக்குதலை துவங்கியவுடன் பல கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. அங்கு பல பகுதிகள் மற்றும் சாலைகளின் பாதுகாப்பை இஸ்ரேல் ராணுவம் ஏற்றுக் கொண்டுள்ளது.

அமெரிக்க விமானம் வருகை

அமெரிக்காவில் இருந்து அதிநவீன ஆயுதங்களுடன் வந்த முதல் விமானம் இஸ்ரேலின் நேவடிம் விமான நிலையத்தில் இறங்கி உள்ளது. இதனை உறுதி செய்துள்ள இஸ்ரேல் ராணுவம், இந்த ஆயதங்கள் குறிப்பிடத்தக்க தாக்குதல்கள் மற்றும் கூடுதல் பலத்தினை உருவாக்க பயன்படுத்தப்படும் எனக்கூறியுள்ளது.

ஜோ பைடன் ஆதரவு

இஸ்ரேலுக்கு உறுதியான, அசைக்க முடியாத ஆதரவை அளிப்பதாக அமெரிக்க தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், ஹமாஸ் தாக்குதல் கொடூர செயல். தேவைப்பட்டால், இஸ்ரேலுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படும். இந்த சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் நாடுகள் அமைப்புகளுக்கு சொல்ல என்னிடம் ஒரு வார்த்தை உள்ளது. அது வேண்டாம் எனக்கூறியுள்ளார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அண்டனி பிளன்கன், இஸ்ரேலுக்கு சென்று அந்நாட்டு அதிகாரிகளை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, இஸ்ரேல் அரசு மற்றும் மக்களுடனான அமெரிக்க அரசின் ஆதரவை அவர் உறுதிபடுத்துவார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

சிரியா எல்லையிலும் தாக்குதல்

சிரியா எல்லைப் பகுதியான கோலன் ஹைட்ஸ் பகுதியில் இருந்தும், இஸ்ரேலை நோக்கி ராக்கெட்கள் ஏவப்பட்டன. இதனையடுத்து, இஸ்ரேல் ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பு மீதும் குற்றம்சாட்டாத நிலையில், சிரியா எல்லைகளில் செயல்படும் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்புகள் காரணமாக இருக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலின் வடக்குப்பகுதியில் நடத்திய தாக்குதலுக்கு ஹெஜ்பொல்லா அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

200 இடங்களில் தாக்குதல்

காசாவில் 200க்கும் மேற்பட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய ராணுவம் போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஹமாஸ் பயங்கரவாதிகளின் முகாம்களும் அடக்கம். தாக்கப்பட்ட வீடுகளில் ஒன்று, ஹமாஸ் ஆயுதக்குழுவின் கமாண்டர் முகம்மது டெய்பியின் தந்தையின் வீடு என பாலஸ்தீனிய செய்தி நிறுவனங்கள் கூறியுள்ளன. இந்த தாக்குதலில் காசாவில் வசிக்கும் 1,80,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். பலர் தெருக்கள் மற்றும் பள்ளிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கவலை

ரஷ்ய அதிபர் புடின் கூறுகையில், இஸ்ரேல் மற்றும் காசாவில்மக்களின் மரணங்களால் அதிகரித்து வரும் பேரழிவு கவலையை தருகிறது. இந்த போர் மத்திய கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் கொள்கை தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது என்றார்.

மோசமானவர்கள்

ஐஎஸ் பயங்கரவாதிகளை விட ஹமாஸ் பயங்கரவாதிகள் மோசமானவர்கள் என தெரிவித்துள்ள இஸ்ரேல் அதிபர் நெதன்யாஹூ, இதனை 3வது முறையாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசிய போது தெரிவித்தேன். அவர்களுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்பட வேண்டும் எனக்கூறியுள்ளார்.

ஈரான் மறுப்பு

ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததாக இஸ்ரேலின் குற்றச்சாட்டை மறுத்துள்ள ஈரானின் அலி காம்னேனி, ‛‛ இந்த அழிவை இஸ்ரேலை தேடிக் கொண்டது. இந்த தோல்வியில் இருந்து சர்வாதிகாரிகள் மீள முடியாது” என தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

காசா மீதான இஸ்ரேலின் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. அந்நகரில் வசிப்பவர்கள் அனைவரையும் வெளியேற கூறியுள்ள இஸ்ரேலிய அரசு, 23 லட்சம் பேர் வசித்த பகுதிகளுக்கு மின்சாரம், உணவு, எரிபொருள் ஆகியவை துண்டிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.