ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் அல்ஷிபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதையடுத்து, இருதரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காஷ்மீர் மண்டல போலீஸின் எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், “சோபியான் என்கவுன்ட்டரில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்த மோரிபட் மக்பூல் மற்றும் ஜாசிம் பரூக் (எ) அப்ரார் என தெரியவந்துள்ளது. இதில் அப்ரார் என்பவர் காஷ்மீர் பண்டிட் கொலை வழக்கில் தொடர்புடையவர் ஆவார்” என கூறப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் கடந்த பிப்ரவரி மாதம் காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.