தங்கையரின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற சகோதரி| The sister brutally killed her younger sister by cutting off her head

தங்கையரின் தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற சகோதரி

எட்டாவா: உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவரது தலையை மண்வெட்டியால் துண்டித்து, மூத்த சகோதரி கொலை செய்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி., மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் உள்ள பகதுார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்வீர் சிங் – சுசிலா தம்பதிக்கு அஞ்சலி பால், 18, சுர்பி, 6, ரோஷ்னி, 4, ஆகிய மூன்று மகள்கள்; நந்த கிஷோர், 12, கங்கையா, 8, ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த 8ம் தேதி இரவு வெளியே சென்றிருந்த பெற்றோர் வீடு திரும்பியபோது, குழந்தைகள் சுர்பி மற்றும் ரோஷ்னியின் தலைகள் துண்டித்து கொலை செய்யப்பட்டு, தனித்தனி அறைகளில் உடல்கள் மற்றும் தலைகள் வைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், மூத்த சகோதரி அஞ்சலி, இரு தங்கைகளையும், மூன்று ஆண் நண்பர்கள் உதவியுடன் மண்வெட்டியால் வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

அஞ்சலி மற்றும் மூன்று நபர்களை கைது செய்து, போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலை செய்ய பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் கொலையாளிகளின் உடைகள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.

மண்வெட்டி மற்றும் உடையில் இருந்த ரத்தக்கறையை போக்கும் விதமாக நீரில் அலசி சுத்தம் செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

அஞ்சலி தன் ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக வீட்டில் இருந்ததை சகோதரிகள் பார்த்ததால், அவர்கள் இருவரையும் நண்பர்கள் உதவியுடன் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கடனை திருப்பிக் கேட்ட வாலிபருக்கு உருட்டு கட்டை அடி

பாகூர்: பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில், தாய் மற்றும் மகனை தாக்கிய, தம்பதி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாகூர் ராமு நாயக்கர் நகரை சேர்ந்தவர் திருவேங்கடம், 45; மாற்றுத்திறனாளி. இவருக்கு சுகுணா, 38; என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

பாகூர் கணபதி நகரை சேர்ந்த திருவேங்கடத்தின் உறவினர் நாராயணசாமி, கடந்த 2019ம் ஆண்டு தனது வீடு ஏலத்திற்கு வருவதாகவும், அதற்கு பணம் கொடுத்து உதவுமாறு திருவேங்கடத்திடம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, திருவேங்கடம், மூன்று லட்ச ரூபாய் ரொக்கம், 6 சவரன் நகையை கொடுத்து உதவி உள்ளார். திருவேங்கடம் பணத்தை திருப்பி கேட்ட போது, அவர் தராமல் காலம் கடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் திருவேங்கடத்தின் மகன் திருநாவுக்கரசு நேற்று முன்தினம் நாராயணசாமி வீட்டிற்கு சென்று, தனது கல்லுாரியில் கல்விக் கட்டணம் கட்ட வேண்டும், எங்களுக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என கேட்டுள்ளார். நாராயணசாமி், அவரது மனைவி அன்னலட்சுமி சேர்ந்து திருநாவுக்கரசை உருட்டுக் கட்டையால் தாக்கி உள்ளனர்.

திருநாவுக்கரசு வீட்டிற்கு சென்று நடத்த சம்பவத்தை தனது தாயிடம் கூறிவிட்டு கல்லுாரிக்கு சென்று விட்டார்.

மேலும், நாராயணசாமி, திருவேங்கடம் வீட்டிற்கு சென்று அவரது மனைவி சுகுணாவை ஆபாசமாக திட்டி, தாக்கி, மானபங்கம் செய்து, கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

காயமடைந்த சுகுணா பாகூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பாகூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், நாராயணசாமி அவரது மனைவி அன்னலட்சுமி மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காதல் விவகாரத்தில் கொலை சேலம் அருகே 4 பேர் கைது

ஏத்தாப்பூர் : சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னம்பிள்ளையூரைச் சேர்ந்த விவசாயி குணசேகரன், 53. இவரின் மகன் பிரசாந்த், 28; பொக்லைன் ஆப்பரேட்டர்.

அதே பகுதியை சேர்ந்த முருகேசனின் 17 வயது மகளை காதலித்தார். முருகேசன் மற்றும் சிலர், கடந்த, 8ல் பிரசாந்த் வீட்டில் வாக்குவாதம் செய்தனர். அப்போது குணசேகரன், பிரசாந்த் தாக்கப்பட்டனர்.

படுகாயமடைந்த இருவரும், சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், குணசேகரன் நேற்று இறந்தார். முருகேசன், 52, அவரது மனைவி முத்தம்மாள், 45, முருகேசன் தம்பி சிவக்குமார், 50, அவரது மனைவி தமிழரசி, 42, ஆகியோர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, நான்கு பேரையும் ஏத்தாப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர்.

ராமேஸ்வரம் அருகே இலங்கை படகு ஊடுருவல் தங்கம் கடத்தப்பட்டதா என விசாரணை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் நேற்று காலை இலங்கை படகு ஊடுருவியது. இப்படகில் இருந்து தங்க கட்டிகளுடன் கடத்தல்காரர்கள் தப்பி சென்றனரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன், கீழக்கரை உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதியில் இருந்து கள்ளத்தனமாக படகில் இலங்கைக்கு கஞ்சா, போதை மாத்திரை, பீடி இலைகளை கடத்தல்காரர்கள் கடத்தி செல்வதும், அங்கிருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வருவதும் சகஜமாக நடக்கிறது.

இதனை இந்திய கடற்படை, கடலோர காவல் படை உள்ளிட்ட மத்திய, மாநில பாதுகாப்பு படையினர் இருந்தும் தடுக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று இலங்கை மன்னாரில் இருந்து புறப்பட்ட பைபர் கிளாஸ் படகில் 3 மர்ம நபர்கள் ராமேஸ்வரம், பாம்பன் கடல் வழியாக ஊடுருவி மண்டபம் வேதாளை வடக்கு கடற்கரையில் படகை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். இதனை மண்டபம் மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், எஸ்.ஐ., யாசர் மவுலானா மற்றும் மத்திய, மாநில உளவுப் போலீசார் ஆய்வு செய்தனர். இதனுள் ஒரு அதிவேக இன்ஜின், 5 கிலோ மீன், வலைகள் இருந்தது.

நேற்று காலை 6:00 மணிக்கு மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படை நிலையத்தை கடந்து இலங்கை படகு ஊடுருவிய சம்பவம் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஒத்திகையின் போதே ஊடுருவல்

மேலும் இதில் தங்க கட்டிகளுடன் கடத்தல்காரர்கள், பயங்கரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என போலீசார் விசாரிக்கின்றனர்.

நேற்று ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரங்களில் பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்கான ‘சாகர் கவாச் ‘என்ற பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் போலீசாரே பயங்கரவாதிகள் போன்று மாறுவேடத்தில் கடலில் ஊடுருவல் செய்வதையும், அவர்களை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைது செய்யும் ஒத்திகை நடந்தது. இந்த ஒத்திகையின் போதே இலங்கை படகில் மர்ம நபர்கள் ஊடுருவி இருப்பது ராமேஸ்வரம் கடல் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி உள்ளது.

தேவகவுடா உறவினரை கொல்ல மர்ம கும்பல் முயற்சி

ஹாசன் : ம.ஜ.த., தலைவர் தேவகவுடாவின், உறவினரை கொல்ல முயற்சி நடந்துள்ளது. காரை வேகமாக ஓட்டி உயிர் தப்பியுள்ளார்.

ம.ஜ.த., கட்சியின் தேசிய தலைவர் தேவகவுடாவின் உறவினர் அஸ்வத், 53; கான்ட்ராக்டர். ஹாசன் சென்னராயப்பட்டணாவில் வசித்து வருகிறார். நேற்று மாலை ஹாசனில் இருந்து காரில் புறப்பட்டவர், ஹொளேநரசிப்பூரில் உள்ள ரேவண்ணா வீட்டிற்கு சென்றார். ரேவண்ணாவுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, காரில் சென்னராயப்பட்டணா நோக்கி சென்றார்.

சூரனஹள்ளி என்ற கிராமப்பகுதியில் சென்ற போது, ஐந்து பேர் கும்பல் காரை வழிமறித்தது. அஸ்வத் கார் கண்ணாடியை இறக்கினார். அப்போது அந்த கும்பல், அஸ்வத்தை ஆயுதங்களால் தாக்கி, கொல்ல முயன்றது. அதிர்ச்சி அடைந்தவர் காரை அங்கிருந்து, வேகமாக ஓட்டினார்.

அந்த கும்பல் பைக்கில் பின்தொடர்ந்தனர். ஆனாலும், அஸ்வத் தப்பி விட்டார். சம்பவம் குறித்து, சென்னராயப்பட்டணா போலீசில் புகார் அளித்தார். விசாரணை நடக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் ரேவண்ணாவின் ஆதரவாளரான, கிருஷ்ணகவுடா, 53 என்பவர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முதல்வர் வீட்டின் மீது கல் வீசியவர் கைது

மைசூரு : மைசூரில் உள்ள முதல்வர் சித்தராமையா வீட்டின் மீது, கல் வீசியவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

latest tamil news

மைசூரு டவுன் ராமகிருஷ்ணா நகரில், முதல்வர் சித்தராமையா வீடு உள்ளது. இந்த வீட்டில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்கள் யாரும் வசிக்கவில்லை.
முதல்வரின் மகன் யதீந்திராவின் உதவியாளர்கள் மட்டும் வசிக்கின்றனர். பாதுகாப்பு பணியில் போலீசாரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை, முதல்வர் வீட்டின் அருகே சுற்றிய ஒருவர், திடீரென கல்லை எடுத்து வீட்டின் மீது வீசினார்.

இதில், ஜன்னால் கண்ணாடி உடைந்தது. வீட்டின் காவலாளிகள் ஓடி வந்து, கல் வீசிய நபரை மடக்கி பிடித்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சரஸ்வதிபுரம் போலீசார், அங்கு வந்து அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அவரது பெயர் சத்தியமூர்த்தி, 50 என்பது தெரிந்தது. சட்டசபை தேர்தலின் போது ஓட்டு போட சென்றவர், வி.வி.பேட் இயந்திரத்தை உடைத்து இருந்தார்.

மைசூரு கலெக்டர் ராஜேந்திரா படத்தை, முகநுாலில் பதிவிட்டு ரவுடி ராஜேந்திரா என்றும் எழுதி இருந்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. அவரிடம், தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

குத்தாட்டத்தில் வாலிபர் பலி

கொப்பால் : விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது குத்தாட்டம் போட்ட வாலிபர் சுருண்டு விழுந்து இறந்தார்.

கொப்பால் கங்காவதி பிரசாந்த் நகரில் வசித்தவர் சுதீப் சஜ்ஜன், 30. தனியார் நிறுவன ஊழியர். விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, பிரசாந்த் நகரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் இரவு அந்த சிலையை கரைக்க, பிரசாந்த் நகர் வாலிபர்கள் ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

அப்போது ஒலிப்பெருக்கியில் அதிக சத்தத்துடன் பாடல் ஒலிபரப்பப்பட்டது. சுதீப்பும், அவரது நண்பர்களும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டனர். அப்போது திடீரென சுதீப் சுருண்டு விழுந்தார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், மாரடைப்பால் இறந்து விட்டதாக கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.