தமிழகம் உட்பட 6 மாநிலங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சல்லடை| NIA officials sieve in 6 states including Tamil Nadu

புதுடில்லி :பிரதமர் நரேந்திர மோடியின் பீஹார் பயணத்தின் போது, தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய வழக்கு தொடர்பாக, தமிழகம் உட்பட ஆறு மாநிலங்களில், தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., எனப்படும், பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நிர்வாகிகளுக்கு சொந்தமான இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பீஹார் தலைநகர் பாட்னா சென்றிருந்த போது, அவரது பொதுக்கூட்டத்தில் இடையூறு ஏற்படுத்த சதித்திட்டம் தீட்டியதாக, கடந்த ஆண்டு ஜூலையில், பி.எப்.ஐ., நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, இந்த வழக்கை என்.ஐ.ஏ., எனப்படும், தேசியபுலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகக் கூறி, கடந்த ஆண்டு செப்., மாதம், பி.எப்.ஐ., அமைப்பை மத்தியஉள்துறை அமைச்சகம் தடை செய்தது.

இதை தொடர்ந்து, நாடு முழுதும் பி.எப்.ஐ., அமைப்புக்குச் சொந்தமான இடங்களிலும், நிர்வாகிகள் வீடுகளில் மத்திய விசாரணை அமைப்புகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக பலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பிரதமர்மோடியின் பீஹார் பயணத்தின் போது சதித்திட்டம் தீட்டிய வழக்கு தொடர்பாக, தடை செய்யப்பட்ட பி.எப்.ஐ., அமைப்புக்கு சொந்தமான இடங்களில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அதன்படி, தமிழகம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், புதுடில்லி ஆகிய ஆறு மாநிலங்களில், 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

அப்போது, மடிக்கணினிகள், மெமரி கார்டுகள், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் மற்றும் பல முக்கிய குற்ற ஆவணங்களை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் கைப்பற்றினர்.

மதுரையில் சோதனை!

மதுரை காஜிமார் தெருவைச் சேர்ந்தவர்முகமது தாஜுதீன் ஹமீத். கார்மென்ட்ஸ் தொழில் செய்கிறார். இவரது வீட்டில் நேற்று அதிகாலை 5:30 மணிக்கு என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையிட வந்தனர். இரண்டு மணி நேரம் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. அவரது அலைபேசி, இரண்டு சிம் கார்டுகளை மட்டும் பறிமுதல் செய்து புறப்பட்டனர். ஏற்கனவே கடந்த செப்., 25ல் தாஜூதீனிடம் விசாரித்த என்.ஐ.ஏ., அதிகாரிகள், அவரது பாஸ்போர்ட் நகலை பெற்றுச்சென்றனர்.

6 மணி நேரம் காத்திருந்த

என்.ஐ.ஏ., அதிகாரிகள்!மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள விக்ரோலி என்ற பகுதியில், மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்துல் வாஹித் ஷேக் வசித்து வருகிறார். இவருக்கு, பி.எப்.ஐ., அமைப்புடன் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க, என்.ஐ.ஏ., அதிகாரிகள், நேற்று காலை 5:00 மணிக்கு சென்றனர். அப்போது வீட்டுக் கதவை அப்துல் வாஹித் ஷேக் திறக்க மறுத்தார். தன் வழக்கறிஞர் வந்த பின், காலை 11:15 மணி அளவில், அவர் வீட்டுக் கதவை திறந்தார். இதனால், ஆறு மணி நேரத்துக்கும் மேல், என்.ஐ.ஏ., அதிகாரிகள்மற்றும் பாதுகாப்புக்கு வந்திருந்த போலீசார், அப்துல் வாஹித் ஷேக்கின் வீட்டு வாசலில் காத்திருந்தனர். விசாரணையை முடித்து, மாலை 4:30 அளவில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.