தயாரிப்பாளர் தில் ராஜுவின் தந்தை மறைவு ; ராம்சரண் நேரில் ஆறுதல்
தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்களின் ஒருவராக அறியப்படுபவர் தயாரிப்பாளர் தில் ராஜு. தொடர்ந்து முன்னணி நடிகர்களை வைத்து ஹிட் படங்களாக தந்து வரும் தில் ராஜு இந்த வருடம் முதல் முறையாக விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தையும் தயாரித்திருந்தார். ஹீரோக்கள் இயக்குனர்களைப் போல இவரது வேடிக்கையான மற்றும் அதிரடியான பேச்சால் இவருக்கென ஒரு ரசிகர் வட்டம் இருக்கிறது.
இந்த நிலையில் இவரது தந்தை சியாம் சுந்தர் ரெட்டி நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 80. தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் தில் ராஜுவின் தந்தையின் மறைவுக்கு தங்களது இரங்கலையும் ஆறுதலையும் கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ராம்சரண் தில் ராஜுவின் வீட்டிற்கு நேரிலேயே சென்று தனது இரங்கலை தெரிவித்தவுடன் அவருக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.