யார் கண்ணு பட்டுச்சோ… சுப்மன் கில்லுக்கு அடுத்து இவருக்கு காயம் – தப்பிக்குமா இந்திய அணி?

IND vs AFG: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) இந்தியா – ஆப்கானிஸ்தான் போட்டி இன்று நடைபெறுகிறது. நடப்பு உலகக் கோப்பை தொடரின் 9ஆவது லீக் ஆட்டமான இது டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வென்று பலமான நிலையிலும், ஆப்கானிஸ்தான் வங்கதேசத்திடம் தோல்வியுற்று சற்று பின்தங்கிய நிலையிலும் உள்ளன.

கில் உடல்நிலை

நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணி வெற்றியுடன் தொடங்கினாலும், தொடர் தொடங்குவதற்கு முன் இந்திய அணியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி வெளியானது. அதாவது, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், நட்சத்திர வீரருமான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் சில போட்டிகளில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை மேற்கொண்ட நிலையில், உடல்நிலை முன்னேற்றம் கண்டதால் வீட்டில் இருந்தே ஓய்வெடுக்கலாம் என்ற மருத்துவர்களின் அறிவுரை காரணமாக நேற்று டிஸ்சார்ஜ் ஆனார். அவர் இந்திய அணியுடன் இதுவரை இணையவில்லை, இருப்பினும் பிசிசிஐயின் மருத்துவக் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

வலியால் துடித்த ரோஹித்?

எனவே, சுப்மன் கில் (Shubman Gill) இன்றைய போட்டியில் மட்டுமின்றி, அக். 14ஆம் தேதி குஜராத் அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியையும் தவறவிடுவார் என கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியே இந்திய ரசிகர்களை விட்டு விலகாத நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

அதாவது, ஆப்கானுக்கு எதிரான போட்டியை (IND vs AFG) முன்னிட்டு மேற்கொண்ட பயிற்சியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரோஹித் சர்மா நேற்று வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் வெளியாகவில்லை. பேட்டிங் பயிற்சியின் போது, பந்து அவரின் காலில் பட்டு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

பந்து தாக்கிய இடத்தில் பயங்கர வலி ஏற்பட்டு, ரோஹித் சர்மா வலியில் துடித்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு, அவர் குறைவான நேரமே பயிற்சி மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அவருக்கு காயம் பலமாக ஏற்பட்டிருந்தால் இந்திய அணிக்கு ஈடுசெய்ய இயலாத பாதிப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் இல்லை என்பதால் இந்திய ரசிகர்கள் கவலைக்கொள்ள தேவையில்லை.

பிளேயிங் லெவனில் ஷமி?

மேலும் இன்றைய போட்டி நடைபெறும் டெல்லி மைதானம் சிறிய அளவில் இருப்பதாலும், ஆடுகளமும் தட்டையாகவே இருக்கும் என்பதாலும் கூடுதல் வேகப்பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டுவர இந்திய அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இரண்டு ஸ்பின்னர்கள் மட்டுமே அணிக்கு தேவை. ஜடேஜா ஆல்-ரவுண்டர் என்பதாலும், குல்தீப் இடது சைனாமேன் ஸ்பின்னர் என்பதாலும் அணியில் நிச்சயம் இடம்பிடிப்பார்கள். 

எனவே, அனுபவ வீரர் அஸ்வினுக்கு (Ashwin) ஓய்வளிக்கப்பட்டு ஷமி உள்ளே கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஷர்துல் தாக்கூரை விட ஷமியின் (Shami) பந்துவீச்சு இந்திய அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம். கடந்த 2019 உலகக் கோப்பை தொடரில் ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் ஷமி ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.