டெக் உலகில் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மீதான ஆய்வுகள் அதிகரித்துள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/human_like_robot_and_artificial_intelligence_2022_01_06_00_25_53_utc.jpg)
இந்த நிலையில் 16 வயது சிறுமி பிரஞ்சலி அவஸ்தி `Delv.AI’ என்ற நிறுவனத்தை உருவாக்கி இருக்கிறார். `மியாமி டெக் வீக்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ஐடியாவை வெளிப்படுத்திய பின், இதற்காக 4,50,000 அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் 3.7 கோடி ரூபாய்) நிதியுதவியாகப் பெற்றுள்ளார்.
2022 ஜனவரியில் தனது `Delv.AI’ செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை நிறுவி இருக்கிறார். இந்த நிறுவனத்தில் 10 டெக் நிபுணர்கள் வேலை செய்கின்றனர். சிறு வயதிலேயே டெக் உலகில் கவனம் பெற்றதற்கு காரணம் தன்னுடைய தந்தையே என தெரிவித்து இருக்கிறார்.
இவரது தந்தையின் கனவே பள்ளிகளில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கல்வியை மேம்படுத்த வேண்டும் என்பதாக இருந்துள்ளது. தனது தந்தையின் ஆர்வத்தை கண்டு ஈர்க்கப்பட்டவர், ஏழு வயதிலேயே கோடிங் (coding) கற்க தொடங்கியுள்ளார்.
இவரின் 11-வது வயதில் குடும்பத்தினர் இந்தியாவில் இருந்து புளோரிடாவிற்கு இடம்பெயர்ந்துள்ளனர். அப்போது டெக்னாலஜியை குறித்து அறிந்து கொள்ள மேலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புகள் மற்றும் கணித போட்டி வகுப்புகளை அட்டெண்ட் செய்திருக்கிறார்.
13 வயதில் புளோரிடா இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டி ஆராய்ச்சி ஆய்வகத்தில் இன்டர்ன்ஷிப்பிற்கு தேர்வாகி இருக்கிறார். இதுவே இவர் தொழில்முனைவோராவதற்கு களம் அமைத்துக் கொடுத்திருக்கிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/AP23216481900882.jpeg)
இவர் இன்டர்ன்ஷிப்பில் இருக்கும் போது ஏற்பட்ட தொற்றுநோயின் பாதிப்பு காரணமாக மெஷின் லேர்னிங் (machine learning) குறித்த உயர்நிலை பள்ளிக் கல்வியை ஆன்லைன் முறையிலேயே முடித்து இருக்கிறார். இந்த காலகட்டத்தில் தான் OpenAI, சாட்ஜிபிடி-3 பீட்டாவை வெளியிட்டது.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி ஆராய்ச்சி தரவுகளைப் பிரித்தெடுப்பது மற்றும் ஆய்வை மொத்தமாகத் தொகுத்து வழங்கும் யோசனை இவருக்கு தோன்றி இருக்கிறது. அப்போது தான் Delv.AI நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.
வணிக பிரிவு மற்றும் ஒரு துறையால் தனியாக கட்டுப்படுத்தப்படும் தரவுகள் `சையலோடு டேட்டா’ (Siloed data) என்று அழைக்கப்படுகிறது. இந்த டேட்டாக்களை டிஸ்மாண்டில் செய்யவும், தரவுகளைப் பிரித்தெடுக்கும் செயல்முறையுமே Delv.AI நிறுவனத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
3.7 கோடி ரூபாய் நிதியில் இருந்து தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாயாக இருக்கிறது. 16 வயதிலேயே ஒரு ஏஐ நிறுவனத்தை தொடங்கி அதனை சிறப்பாக வழிநடத்தி வரும் சிறுமி தற்போது கவனம் பெற்று வருகிறார்.
மேலும் உச்சம் தொட வாழ்த்துக்கள், Pranjali Awasthi…