உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி நடந்து வருகிறது. ஐ.பி.எல்-இன் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டு மைதானத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட கோலியும் நவீன் உல் ஹக்கும் இந்தப் போட்டியில் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நண்பர்களாக மாறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/20231011_204400.jpg)
கடந்த ஐ.பி.எல் தொடரில் பெங்களூர் அணியும் லக்னோ அணியும் ஆடிய ஒரு போட்டி நடந்திருந்தது. அதில் லக்னோ அணிக்காக நவீன் உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருக்க, கோலி ஃபீல்டிங் செய்து கொண்டிருப்பார். இடையில் திடீரென இருவரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். போட்டி முடிந்த பிறகும் இந்தச் சண்டை நீண்டது. லக்னோ அணியின் பயிற்சியாளர் குழுவைச் சேர்ந்த முன்னாள் வீரர் கவுதம் கம்பீரும் இந்தச் சண்டைக்குள் நுழைந்திருப்பார். அவருக்கும் கோலிக்கும் இடையே இன்னும் ஆக்ரோஷமாக வாக்குவாதம் நடந்திருந்தது. அந்தப் போட்டிக்குப் பிறகு நவீன் உல் ஜக், கோலியைச் சீண்டும் வகையில் இன்ஸ்டா ஸ்டோரியெல்லாம் கூட போட்டு வந்தார்.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு நவீன் உல் ஹக், கம்பீர் ஆகிய இருவரும் எந்த மைதானத்திற்குச் சென்றாலும் அவர்களை நோக்கி ரசிகர்கள் ‘கோலி… கோலி…’ என ஆராவாரம் செய்து அவர்களைக் கடுப்பேற்றி வந்தனர். இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதிய இந்தப் போட்டியிலும் நவீன் உல் ஹக் பேட்டிங் ஆட வருகையிலும் ‘கோலி… கோலி…’ என ரசிகர்கள் ஆக்ரோஷமாக ஆராவாரம் செய்தனர். இந்தியா பேட்டிங்கைத் தொடங்கி ரோஹித் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். முதல் விக்கெட்டாக இஷான் கிஷன் வெளியேறிய பின்னர் கோலி பேட்டிங் ஆட வந்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/20231011_204357.jpg)
ரோஹித்தும் வெளியேறிய பின்னர்தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியது. ரசிகர்களை நோக்கி, ‘நவீன் உல் ஹக்கிற்கு எதிராகக் கோஷமிடுவதை நிறுத்துங்கள்’ என கோலி சைகையில் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து கோலியும் நவீன் உல் ஹக்கும் கைக்குலுக்கி ஆரத்தழுவி பரஸ்பரம் தோளில் தட்டிக்கொடுத்துச் சென்றனர். இந்தச் சம்பவம் ரசிகர்களை உற்சாகமடையச் செய்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/20231011_204347.jpg)
ஏற்கெனவே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு போட்டியின் போது பால் டேம்பரிங் சர்ச்சை காரணமாக ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் கேலி செய்த சமயத்தில், ‘அவருக்காக கைதட்டி ஆதரவளியுங்கள்’ என கோலி கேட்டுக் கொண்டிருந்தார். அந்தச் சம்பவமும் இணையத்தில் பயங்கர வைரலானது. கோலியின் பெருந்தன்மையைக் கண்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.